அரையிறுதியில் 23 ஆண்டுகால சாதனையை தூளாக்கிய 'கில்லர்' மில்லர்! ஆனால் ஐசிசி மீது விமர்சனம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அதிரடி சதம் விளாசியதன் மூலம், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனைகள் படைத்தார்.
டேவிட் மில்லர் சாதனை சதம்
சாம்பியன்ஸ் டிராஃபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இப்போட்டியில் அணியின் வெற்றிக்காக போராடிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சதம் விளாசினார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசி 'கில்லர்' மில்லர் எனும் பெயரை மீண்டும் நிரூபித்தார்.
இதன்மூலம் 23 ஆண்டுகால சாதனையை மில்லர் முறியடித்தார். சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிவேக சதமாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் 77 பந்துகளில் விளாசியதுதான் இருந்தது. அதனை மில்லர் 67 பந்துகளில் முறியடித்து சாதனை படைத்தார்.
கடந்த வாரத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவும் துபாய் மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளன. நியூசிலாந்து அணி தனது கடைசில் குழு ஆட்டத்தில் இந்தியாவை சனிக்கிழமை எதிர்கொண்டது.
பின்னர் திங்களன்று காலை சிறிது நேரத்தில் திரும்பி வந்து அரையிறுதிப் போட்டியை விளையாடியது.
இதற்கிடையில், தென் ஆப்பிரிக்கா முந்தைய நாள் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய பிறகு, துபாயில் முன்னதாகவே நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டிக்குத் தயாராக போதுமான நேரம் கிடைக்கும் என்பதை உறுதி செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் புறப்பட்டது.
ஆனால் முடிவுகள் மாறியதால், அவர்கள் அங்கு விளையாடத் தேவையில்லை என்பது தெளிவானது. இதன் காரணமாக துபாயில் தரையிறங்கிய 12 மணிநேரத்திற்குப் பிறகு அடுத்த விமானத்தில் லாகூருக்கு திரும்பியது.
சிறந்த சூழ்நிலை அல்ல
இதுகுறித்து பேசிய டேவிட் மில்லர் (David Miller), "ஒரு போட்டியை முடித்து அதிகாலையில் விமானத்தில் பறக்க வேண்டியிருந்தது. இது ஒரு மணிநேர 40 நிமிட விமானப் பயணம் மட்டுமே, ஆனால் நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது. பின்னர் நாங்கள் மாலை 4 மணிக்கு துபாய்க்கு வந்தோம். காலை 7.30 மணிக்கு நாங்கள் திரும்பி வர வேண்டியிருந்தது. அது நன்றாக இல்லை.
நாங்கள் 5 மணிநேரம் பறந்ததுபோல் இல்லை, மேலும் புத்துணர்வு பெற எங்களுக்கு போதுமான நேரம் இருந்தது. ஆனால் அது இன்னும் ஒரு சிறந்த சூழ்நிலை அல்ல" என்றார்.
எனினும், அரையிறுதியில் நியூசிலாந்து சிறந்த அணி என்றும், வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுவதால், அந்த அணியுடன் விளையாடும் ஏனைய அணிகள் துபாய்க்கு சென்று விளையாடிவிட்டு, பின்னர் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டிய நிலை இந்தத் தொடரில் இருந்தது.
ஐசிசியின் இந்த அட்டவணை பிற அணி வீரர்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதையே மில்லர் இவ்வாறு விமர்சித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |