கொரோனா நிவாரண நிதியில் பல மில்லியன் முறைகேடு: கனடாவில் சிக்கிய இந்திய குடும்பம்
கனடாவில் கொரோனா நிவாரண நிதியில் இருந்து சுமார் 12 மில்லியன் டொலர் தொகையை முறைகேடாக இந்திய வங்கிகளில் சேமித்த நபர் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் விசாரணையை முன்னெடுத்துள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வித்துறை கீழில் ஆண்டுக்கு $176,608 ஊதியத்தில் பணியாற்றி வந்தவர் சஞ்சய் மதன் என்பவர்.
இவரது சொத்து மதிப்பு 28 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. இவரது மனைவி ஷாலினி, மகன்கள் சின்மயா மற்றும் உஜ்ஜாவால் ஆகியோர் விதான் சிங் என்பவருடன் இணைந்து பொதுமக்களுக்கான கொரோனா நிவார நிதியில் இருந்து சுமார் 11.6 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர்.
உண்மை அம்பலமான நிலையில் அந்த தொகை பின்னர் மாகாண கருவூலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், இந்த முறைகேடு தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் ஷாலினி மற்றும் அவரது இரு மகன்கள் சார்பில் ஒப்படைக்கப்பட்ட சத்தியப்பிரமாணத்தில் முறையிட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, இந்தியாவில் தமக்கு 5 வங்கிக்கணக்குகள் இருப்பதாகவும், மொத்தம் $12,365,719 அதில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் மதன் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் விடுத்த கோரிக்கையை அடுத்து, அந்த கணக்குகள் அத்தனையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் கனேடிய கடவுச்சீட்டுகள் வைத்திருக்கும் சஞ்சய் மதன் பனாமா நாட்டில் நிரந்தர வதிவிட உரிமையும் பெற்றுள்ளார்.