தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்
minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
சென்னை மருத்துவக்கல்லூரியில், நடைபெற்ற 192 வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சுவாசத் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
நடப்பாண்டில் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலால் 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
2025 ம் ஆண்டில் 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. டெங்குவை கட்டுக்குள் வைக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 25,000 க்கும் அதிகமான கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப் புழுக்களை கண்டறிந்து, அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள்" என கூறியுள்ளார்.
தீவிர காய்ச்சல், தாங்கமுடியாத தலைவலி, கண்வலி, உடல் சோர்வு, வாந்தி, மூட்டு மற்றும் தசைவலி போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள் ஆகும். காய்ச்சல் குறைந்த பிறகும் பொதுவாக 3 முதல் 7 நாட்களுக்குள் சிலருக்கு பாதிப்பு தீவிரமடையலாம்.

வயிற்று வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.