மறுபுலம்பெயர்தலுக்கெதிராக ஐரோப்பா நடவடிக்கை எடுக்கவேண்டும்... சுவிஸ் அமைச்சர்
ஐரோப்பிய ஒன்றியம் தன் எல்லைகளையே பாதுகாக்க முடியவில்லை என்றால், ஐரோப்பாவுக்குள் போக்குவரத்து சுதந்திரம் இருக்காது என்கிறார் சுவிஸ் நீதித்துறை அமைச்சர்.
சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Karin Keller-Sutter, சமீபத்தில் அரசு முறைப் பயணமாக போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவ்னியா முதலான சில நாடுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது போஸ்னியாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோரில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே போஸ்னியாவில் புகலிடம் கோரியவர்கள் என்பதை தான் கவனித்ததாக தெரிவிக்கிறார். புகலிடம் கோரியவர்களில் பெரும்பாலானோர் Schengen பகுதியில் வாழவே விரும்புகிறார்கள் என்கிறார் அவர்.
ஐரோப்பா மறுபுலம்பெயர்தலுக்கெதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் Karin.
மறுபுலம்பெயர்தல் என்பது, பாதுகாப்புக் கோரி ஒரு நாட்டில் புகலிடம் கோரி வருபவர்கள், தாங்கள் முதலில் புகலிடம் கோரிய நாட்டில் குடியமராமல், வேறொரு நாட்டுக்குச் சென்று குடியமர்வதாகும். இதை எதிர்த்துத்தான் Karin குரல் கொடுத்துள்ளார்.
மொத்த ஐரோப்பிய புகலிட அமைப்புக்கும் மறுபுலம்பெயர்தல் ஒரு பிரச்சினையாக ஆகிவிட்டது என்று கூறும் Karin, அப்படி மறுபுலம்பெயர்ந்தவர்களை மீண்டும் அவர்கள் எந்த நாட்டில் முதலில் புகலிடம் கோரினார்களோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் வகையில் ஐரோப்பா முழுமைக்குமான பொதுவான கொள்கை ஒன்று தேவை என்கிறார்.
தாங்கள் எந்த நாட்டில் வாழ விரும்புகிறோம் என்பதை அகதிகளே தேர்ந்தெடுக்க முடியுமானால், அது Dublin திட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியாகும் என்கிறார் அவர்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அதன் புகலிடக் கோரிக்கை திட்டம் (accelerated procedure for asylum applications in Switzerland), திறம்பட செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது என்கிறார் Karin.
தான் நீதித்துறை அமைச்சராக பொறுபேற்றபோது சட்ட விரோத புலம்பெயர்தல் தொடர்பான 11,000 வழக்குகள் இருந்தன என்று கூறும் Karin, இப்போது வெறும் 130 வழக்குகளே உள்ளன என்கிறார்.
சுருங்கக் கூறினால், புகலிடம் கோருவோருக்கு எங்கு அடைக்கலம் கொடுப்பது என்பதை முடிவு செய்வதிலிருந்து, அவர்கள் இன்னொரு நாட்டுக்கு சென்று குடியமர்வதை தடுப்பது, அப்படியே குடியமர்ந்தால் அவரக்ளை மீண்டும் அவர்கள் முதலில் புகலிடம் கோரிய நாட்டுக்கே திருப்பி அனுப்புவது வரையிலான அனைத்தையும் ஐரோப்பிய நாடுகளே முடிவு செய்யவேண்டும், அவற்றை அகதிகள் முடிவு செய்ய விடக்கூடாது என்பது Karinஉடைய எண்ணம் எனலாம்.