தமிழக எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள் - எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அமைச்சர்
தமிழக எம்.பிக்கள் குறித்த தனது கருத்தை திரும்ப பெறுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், "மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நாகரீகமற்றவர்கள்
இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் பின்வாங்கியது. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். அவர்கள் ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்." என விமர்சித்தார்.
திரும்ப பெற்ற அமைச்சர்
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு அவையில் இருந்த தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை.
மத்திய அமைச்சரின் பேச்சு எங்களை புண்படுத்துகிறது. மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என கூறினார்.
கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த வார்த்தை தங்களை காயப்படுத்தியிருந்தால், அதை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |