தினக்கூலித் தொழிலாளி மகளின் ஜேர்மனி கனவு... அமைச்சர் செய்த உதவி
Minister steps in to fulfill daily wager's daughter's Germany aim: தினக்கூலித் தொழிலாளி ஒருவரின் மகளுடைய ஜேர்மனி கனவை நனவாக்க அமைச்சர் ஒருவர் உதவியுள்ளார்.
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய நகரம் தேவரகொண்டா. அங்கு வாழ்ந்துவரும் தினக்கூலித் தொழிலாளர்களான ஒரு தம்பதியரின் மகள் பரிமளா.
ஜேர்மனி கனவை நனவாக்க உதவிய அமைச்சர்
பரிமளாவிற்கு, ஜேர்மன் உயர் கல்வி ஒரு கனவு. அவரது கனவை நனவாக்க உதவியுள்ளார் அமைச்சர் ஒருவர்!

பரிமளா, ஐஐடி மெட்ராஸ் என்னும் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பது வரை பல்வேறு உதவிகள் செய்துவந்த, தெலங்கானா சாலைகள், கட்டிடங்கள் மற்றும் திரைப்படத்துறை அமைச்சரான கோமட்டிரெட்டி பிரதீக் ரெட்டி, பரிமளா ஜேர்மனியில் உயர் கல்வி கற்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்காக அவரது அறக்கட்டளை பரிமளாவுக்கு இந்திய மதிப்பில் 10 லட்ச ரூபாய் கொடுத்து உதவியுள்ளது.
விடயம் என்னவென்றால், ஜேர்மனிக்குக் கல்வி கற்பதற்காக சென்ற பரிமளா, எதிர்பாராத ஆவணச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.
ஆகவே, அவரால் ஜேர்மனியில் தனது பணத்தை அணுக முடியாமல் போக, மீண்டும் அமைச்சர் ரெட்டியிடம் உதவி கோரியுள்ளார் பரிமளா.
அமைச்சர் ரெட்டி, பரிமளா ஜேர்மனிக்கு செல்ல மட்டும் அல்ல, அவர் கல்வி கற்று முடிக்கும் வரை அவருக்கு தனது அறக்கட்டளை உதவும் என வாக்களித்திருந்தார்.

அவர் சொன்னதுபோலவே, முன்பின் தெரியாத வெளிநாடொன்றில் பரிமளா பணம் இல்லாமல் தவித்தபோது, உடனடியாக தனது அறக்கட்டளை மூலம் பரிமளாவுக்கு கூடுதலாக 6 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார் ரெட்டி. இதன் மூலம் பரிமளாவுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி, 16 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமைச்சரின் உதவியால் நெகிழ்ந்துபோன பரிமளா, ஜேர்மனியிலிருந்து அனுப்பியுள்ள காணொளிச் செய்தி ஒன்றில், கடினமான நேரத்தில் தனக்குத் துணையாக நின்றதற்கும், கொடுத்த வாக்கை நிறைவேற்றியதற்கும் அமைச்சர் ரெட்டிக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பரிமளாவின் செய்திக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரெட்டி, பரிமளாவின் அன்பான வார்த்தைகளால் தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும், தகுதியான மாணவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது வெறும் நிதி உதவி வழங்குவதை விட மேலானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஆரம்பக்கட்ட நிதியுதவியுடன் முடிந்துவிடுவதில்லை, அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சவாலிலும் அவர்களுக்குத் துணையாக நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேவரகொண்டாவில், ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகளாக இருந்து, ஐஐடி மெட்ராஸ் வழியாக தற்போது ஜேர்மனி வரை பரிமளா மேற்கொண்ட எழுச்சியூட்டும் பயணத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், அவரது சாதனைகள் தெலங்கானாவைப் பெருமைப்படுத்தியுள்ளன என்று கூறியுள்ளார்.
அத்துடன், கல்விக்குக் குடும்பங்களை மாற்றியமைத்து, தலைமுறைகளை மேம்படுத்தும் சக்தி உண்டு என்றும் கூறியுள்ள அமைச்சர் ரெட்டி, பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக இளம் மாணவர்கள் தங்கள் கனவுகளைக் கைவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
’கடினமாக உழை, கவனத்துடன் இரு, நாங்கள் எப்போதும் உனக்குத் துணையாக இருப்போம் என்பதை அறிந்துகொள்’ என்று கூறியுள்ள அமைச்சர் ரெட்டி, பரிமளாவின் முதுகலைப் பட்டப்படிப்பு வெற்றிபெற வாழ்த்தியதோடு, இந்தியாவைப் பெருமைப்படுத்துமாறும் அவரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.