1000 ரூபாய் உரிமைத்தொகை: யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
1000 ரூபாய் உரிமைத்தொகை
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 2 ஆண்டுகள் ஆன நிலையில், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கப்படும் எனும் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிரக்கட்சிகள் விமர்சித்து வந்தன. துமட்டுமின்றி, தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மாநில பட்ஜெட் கூட்டத்தில் 'தகுதியான' குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அண்ணா பிறந்தநாளான அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும், இதற்காக முதற் கட்டமாக ரூ.7,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
விமர்சனம்
2021 தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 என அறிவித்துவிட்டு தற்போது 'தகுதியான' குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது முரணாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
இதற்கு பதிலளித்துள்ள திமுக, "ரேஷன் பொருட்கள் தொடங்கி உதவி தொகை வரை தகுதியின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த திட்டமும் தகுதியின் அடிப்படையில்தான் வழங்கப்படும்" என்று தெரிவித்தது.
யாருக்கு கிடைக்காது
வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஏற்கெனவே ஏதேனும் அரசின் உதவிகளை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மொதம் 2.33 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்க்கும்நிலையில், இதில் யாருக்கு உரிமைத்தொகை என்பதை வருவாய் துறையினரும், மகளிர்மேம்பாட்டு திட்ட துறையினரும் சேர்ந்து பட்டியல் தயாரித்து வருகின்றனர். இதில் நிதி ஒதுக்குவது மட்டுமே நிதித்துறையின் பங்கு.
தகுதியின் அடிப்படையில்தான் வழங்கப்படும்
ஆனால், உரிமைத்தொகை பெறுவதற்கான அளவுகோலை நிர்ணயிப்பது முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும்தான். மேற்குறிப்பிட்டவாறு 2.33 கோடி பேருக்கும் ரூ.1,000 கொடுக்க வேண்டுமென்றால் மொத்தம் ரூ.27 லட்சம் கோடி செலவாகும். இது மிகப்பெரிய பணவீக்கத்தை ஏற்படுத்தும். எனவே தகுதியின் அடிப்படையில்தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "யாரெல்லாம் வருமான வரி செலுத்துகிறார்கள் எனும் பட்டியலை சேகரிக்க தொடங்கியுள்ளோம். அதேபோல கருவூலத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பணம் சரியாக மக்களின் வங்கி கணக்கில் சென்று சேர்கிறதா? என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் பணி இதுதான். ஆனால் யார் யாருக்கு பணம் கிடைக்கும் என்று என்னால் தற்போது யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
அதேபோல இந்த ரூ.1,000 உரிமைத்தொகை யார் யாருக்கு என்பது முடிவு செய்யப்பட்ட பின்னர்தான் அதற்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும்" என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.