ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் சாதாரண ட்ரோன் அல்ல: அதிர்ச்சித் தகவல்
ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்களுடன் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன!
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்
ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
மேலும், வானில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் ஒன்று உட்பட பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்றில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, கூடுதல் பரபரப்பு உருவானது.
மொத்தத்தில், நேற்று Leipzig-Halle விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதிர்ச்சித் தகவல்
இந்நிலையில், Leipzig-Halle விமான நிலையத்தின் ஓடுபாதையில், கண்டுபிடிக்கப்பட்ட மர்மப் பொருள், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் தோப்ரின்ட், ஏற்கனவே ட்ரோன்களால் பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், இப்போது வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்டுள்ள ட்ரோன்கள் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்படுவது புதிய அச்சுறுத்தல் ஆகும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களின்போது, அவை எங்கிருந்து வந்தது என்பது உடனடியாக தெரியவராதது கூடுதல் பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார் அலெக்சாண்டர்.
ஆக, விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் எங்கிருந்து வந்தது, அதன் பின்னணியில் இருப்பது யார், அந்த ட்ரோனுடன் இனைக்கப்பட்டிருந்தது என்ன வகையான வெடிப்பொருள் என்பது போன்ற விடயங்கள் குறித்து விசாரணை துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |