சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் சில சலுகைகளை கட்டுப்படுத்தியுள்ள கல்வி அமைச்சு
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சில காப்புறுதி சலுகைகளைக் கல்வி அமைச்சு கட்டுப்படுத்தியுள்ளது. எனினும் இது தொடர்பில் பெற்றோர்களுக்குத் தெளிவின்மையால் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
முன்னர் கூறப்பட்ட சலுகைகளின் படி பெற்றோர் இறந்தால், குடும்பங்களின் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சலுகைகள் கிடைத்தன.
எனினும் தற்போது மாதாந்த வருமானம் 15, 000க்கு குறைந்தால் சலுகை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றத்தின் படி, வரையறுக்கப்படாதிருந்த சிக்கலான நோய்களுக்கான அதிகபட்ச கட்டணம் இப்போது 15 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான பெற்றோர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைமுறைக்கு வந்ததாகக் கூறப்படும் இந்த மாற்றத்தைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்.
கோவிட் தொற்றுநோயால் பெரும்பாலும் பாடசாலைகள் மூடப்பட்டதால், பெற்றோருக்குத் தகவல்களை வழங்க முடியாது போனதாகக் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு முதல் 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் பணத்தைப் பெறக் காத்திருக்கிறார்கள், கணக்கின்படி அரசாங்கம் இன்னும் 300 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் காப்புறுதி செய்யப்பட்டவர்களுக்குச் செலுத்தவில்லை என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இறப்பு சலுகைக் கொடுப்பனவுகள் மற்றும் மூக்குக் கண்ணாடி கொள்வனவுகளுக்கான இந்த பணம், இவை, கடந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு செய்யப்பட்ட உரிமைகோரல்களுக்கானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.