காணாமல் போய் 18 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு வயது சிறுமி: மீட்கப்பட்ட தருணத்தைக் காட்டும் வீடியோ
அவுஸ்திரேலியவில் நான்கு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போய் 18 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால் நாடே மகிழ்ச்சியில் திளைக்கிறது.
குழந்தையின் தாய் முதல் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வரை, குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதற்காக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவில், க்லியோ ஸ்மித் (Cleo Smith) என்ற நான்கு வயது சிறுமி, தன் பெற்றோருடன் கேம்பிங் சென்றிருந்தபோது மாயமானாள். 18 நாட்களாக பொலிசார் அவளை இடைவிடாமல் தேடிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவளை அவுஸ்திரேலிய மேடி என்று பத்திரிகைகள் விமர்சிக்கத் தொடங்கின.
அதற்குக் காரணம், பிரித்தானிய குழந்தையான மேடி என்னும் மேட்லின் மெக்கேன், போர்ச்சுகல்லுக்கு தன் பெற்றோருடன் சுற்றுலா சென்றபோது மாயமானாள். அவள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை! ஆகவே, மேடியின் நிலைமை க்லியோவுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் உருவாகியிருந்தது.
ஆனால், அவுஸ்திரேலிய பொலிசாரின் தளராத முயற்சியுடன், க்லியோ குறித்து ஒரு துப்பு கிடைக்க, நள்ளிரவு ஒரு மணியளவில், அவள் காணாமல் போன இடத்திலிருந்து 47 மைல் தொலைவிலுள்ள, Carnarvon என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டை பொலிசார் சூழ்ந்துகொண்டார்கள்.
அந்த வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருக்க, மெதுவாக வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், குழந்தை க்லியோ அங்கிருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்தனர்.
பொலிசார் ஒருவர் குழந்தையை அள்ளி அணைத்துக்கொள்ள, அவளிடம் மற்றொரு பொலிசார் உன் பெயர் என்ன என்று கேட்க, முதலில் அமைதியாக இருந்த குழந்தை மூன்றாவது முறை புன்னகையுடன் என் பெயர் க்லியோ என்று கூறியபோது, பெரும்பாலான பொலிசாருக்கு கண்கள் கலங்கி விட்டனவாம்.
உடனே, க்லியோவிடம் அந்த பொலிசார், ’க்லியோ, நாங்கள் உன்னை உன் அம்ம அப்பாவிடம் அழைத்துச் செல்லப்போகிறோம்’ என்று கூறியுள்ளார்.
இந்த நெகிழ வைக்கும் தருணங்களைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
க்லியோ தன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது.
க்லியோ மீட்கப்பட்ட அதே நேரத்தில், அவள் அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சற்று தொலைவில் வசித்த 36 வயது நபர் ஒருவர், குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காவலில் அடைக்கப்பட, அவர் க்லியோவைக் கடத்தியவர் என்பது தெரியவந்ததும், அவரது சக கைதி ஒருவர் அவரை அடித்துத் துவைத்துவிட்டாராம். தலையில் கட்டுடன் அந்த நபர் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.