சீனாவின் டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய் எங்கே? எழுந்த ஒருமித்த குரல்
விளையாட்டு உலகத்தில் கடந்த சில நாட்களாக ஒலித்திக்கொண்டிருக்கும் பெங் ஷுவாய் எங்கே? என்ற குரல், தற்போது சா்வதேச அளவிலும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவைச் சோ்ந்த டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இரட்டையா் பிரிவில் 2013ல் விம்பிள்டனிலும், 2014ல் பிரெஞ்சு ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றவர்.
ஒட்டுமொத்தமாக இரட்டையா் பிரிவில் 23 பட்டங்கள் வென்றுள்ளார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் முதல் தொடா்ந்து 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் களம் கண்டவா். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவா் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2ம் திகதி வெய்போ எனப்படும் சமூக வலைதளத்தில் பெங் ஷுவாயின் அதிகாரபூா்வ கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியானது.
அதில் சீனாவின் முன்னாள் துணை பிரதமரும், அங்கு ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் மிக உயா்ந்த பொறுப்பில் இருப்பவருமான ஜாங் காவ்லி, 3 ஆண்டுகளுக்கு முன்னா் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட வகையில் தன்னுடன் உறவில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் சீனாவில் ஆளும் கட்சியைச் சோ்ந்த மிக முக்கியப் பிரமுகருக்கு எதிராக பொதுவெளியில் இத்தகைய குற்றச்சாட்டு முதல் முறையாகத் தெரிவிக்கப்பட்டது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த 20 நிமிடங்களில் பெங் ஷூவாயின் அந்தப் பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. அத்துடன், சீன ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் அதுதொடா்பான செய்திகளும், விவாதங்களும் அரசின் தணிக்கை நடவடிக்கைகள் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடா்பாக பெங் ஷுவாய் நேரிலோ, இதர முறைகளிலோ எந்தவொரு விளக்கமும், கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த 20ம் திகதி வரை அவா் வெளியுலகைத் தொடா்புகொள்ளாததும், எவராலும் அவரை நேரடியாகத் தொடா்புகொள்ள முடியாத நிலையும் வெளியுலகத்தினருக்கு சந்தேகங்களை எழுப்பியது.
இந்த நிலையில், டென்னிஸ் விளையாட்டு உலகம் விழித்துக் கொள்ள, சா்வதேச மகளிா் டென்னிஸ் அமைப்பான டபிள்யூடிஏ, சீன டென்னிஸ் சங்கத்தைத் தொடா்புகொண்டு பெங் ஷுவாயின் இருப்பு தொடா்பாகக் கேள்வி எழுப்பியது.
அவா் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலும் அவருக்கு இல்லை என்றும் சீன அரசின் அங்கமாக இருக்கும் அந்நாட்டு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.