ஓராண்டுக்கு முன் மாயமான பிரான்ஸ் நாட்டு இளம்பெண்: GPS மூலம் தெரியவந்த திடுக் தகவல்
பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர் 13 மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் மாயமான நிலையில், சந்தேக நபர் ஒருவரின் காரிலிருந்த GPS மூலம் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாயமான பிரான்ஸ் நாட்டு இளம்பெண்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, லினா (15) என்னும் இளம்பெண் Saint-Blaise-La-Roche என்னுமிடத்திலுள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் Strasbourg என்னுமிடத்திலுள்ள தனது காதலனை சந்திப்பதற்காக ரயில் ஏறச் சென்றுகொண்டிருந்தார்.
காலை 11.22 மணிக்கு அவரது ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருந்த ட்ராக்கிங் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு லினாவைக் காணவில்லை. பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
GPS மூலம் தெரியவந்த திடுக் தகவல்
பொலிசார் எக்கச்சக்கமான தரவுகளை சேகரித்து ஆய்வு செய்துவந்த நிலையில், லினா கடைசியாக காணப்பட்ட இடத்திற்கு அருகே, Ford Puma கார் ஒன்று சென்றிருந்தது தெரியவந்தது.
அந்தக் காரின் GPS தரவுகளை ஆராயத் துவங்கிய பொலிசார், அது எங்கெல்லாம் நிறுத்தப்பட்டது என ஆராய, லினா காணாமல் போன இடத்துக்கு அருகே அந்தக் கார் நிறுத்தப்பட்டது தெரியவந்தது.
அதை வைத்து, Nievre என்னுமிடத்தில் லினாவைத் தேடியபோது, துரதிர்ஷ்டவசமாக, புதன்கிழமை, அவரது உயிரற்ற உடல், மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் உள்ள நீரோடை ஒன்றில், தடுப்புச்சுவருக்கு அருகில் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
விடயம் என்னவென்றால், அந்தக் காருக்கு சொந்தக்காரரான, வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் சாமுவேல் (Samuel Gonin) என்னும் நபர், ஜூலை மாதம் தனது உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுவிட்டார்.
அவர் உயிரிழக்கும் முன் எழுதிவைத்துள்ள கடிதம் ஒன்றில், நான் எனது கௌரவத்தை இழந்துவிட்டேன், எனது கண்ணியத்தையும், மனிதத்தன்மையையும் இழந்துவிட்டேன்.
நான்போகத்தான் வேண்டும், என்னை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை, எல்லாம் வேகமாக நடக்கிறது என எழுதிவைத்துள்ளார்.
இதற்கிடையில், லினா கொல்லப்பட்டது எப்படி என்பதை அறிவதற்காக அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |