லண்டனில் மாயமான இந்திய இளைஞர் சடலமாக மீட்பு? வெளியாகிவரும் முரண்பட்ட தகவல்கள்
லண்டனில் கல்வி கற்பதற்காகச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லண்டனில் மாயமான இந்திய இளைஞர்
இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன் வந்திருந்த குரஷ்மான் சிங் (Gurashman Singh Bhatia, 23), கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி, நண்பர்களை சந்திப்பதற்காகச் சென்றுள்ளார்.
டிசம்பர் 15 அன்று, லண்டனிலுள்ள South Quay என்னுமிடத்திலுள்ள CCTV ஒன்றில் சிங் கடைசியாக காணப்பட்டுள்ளார். அவர் அறைக்குத் திரும்பாததால், அவரது நண்பர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
Image: Met Police
உடல் கண்டுபிடிப்பு
இந்நிலையில், நேற்று, அதாவது, டிசம்பர் 20ஆம் திகதி, மதியம், South Quayயிலுள்ள நீர் நிலை ஒன்றில் ஒரு இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சிங்கின் உடல் என பொலிசார் கருதுகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பில் பொலிசார் இந்தியாவிலிருக்கும் சிங்கின் குடும்பத்தாருக்கு தகவலளித்துள்ள நிலையில், அவரது உடல் இன்னமும் முறைப்படி அடையாளம் காணப்படவில்லை என பிரித்தானிய ஊடகம் ஒன்று (My London) செய்தி வெளியிட்டுள்ளது.
முரண்பட்ட தகவல்கள்
ஆனால், இந்திய ஊடகங்கள் வித்தியாசமான செய்திகளை வெளியிட்டுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், இன்று (21.12.2023) வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிங்கின் குடும்பத்தினர், சிங் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Image: Met Police
இந்தியாவிலிருக்கும் சிங்கின் சகோதரரான ஆஷ்மான் சிங், நாங்கள் இன்னமும் சிங்கை தேடிக்கொண்டிருக்கிறோம்,அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல, லண்டன் பொலிசாரும், எந்த உடலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், பல ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், சிங்கின் உடல் Canary Wharfஇலுள்ள நீர் நிலையிலிருந்து மீட்கப்படவில்லை என்றும், அவ்வாறு வெளியாகிவரும் செய்திகள் தவறு என்றும், தாங்கள் சிங்கை தொடர்ந்து தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |