அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்... பெற்றோரின் கண் முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்
கனடாவில், மகன் தேர்வுகளை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட, கடற்கரைக்கு சென்ற ஒரு குடும்பம், கண் முன்னே மகனை பறிகொடுத்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறது.
இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21).
கடந்த வியாழனன்று, தனது இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம்.
அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul. தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என்று கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் அவர்.
அப்போது திடீரென கால் சறுக்கி கடலில் விழுந்திருக்கிறார் Supul. தண்ணீரில் விழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள். திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் விபரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகன் கதற, சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe.
ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அபாயம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தன்நிலைக்கு வரும்போது, இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் Supulஐக் காணவில்லை. தண்ணீரில் மூழ்கிவிட்டார் அவர்.
தந்தை திகைத்துப் போய் நிற்க, தாய் கதற, தகவலறிந்து ஹெலிகொப்டர் உதவியுடன் Supulஐத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் பொலிசார். ஆனால், அவரது உடல் கிடைக்கவேயில்லை.
ஊடகவியலாளர் ஒருவர் தயங்கியவண்ணம், என்ன நடந்தது என்று கூற முடியுமா என்று கேட்க, நடந்ததை மிகத் தெளிவாக விவரிக்கிறார் Supulஇன் தந்தை Jayasinghe.
உங்கள் ஒரே மகனை இழந்த நிலையில், உங்களால் எப்படி இப்படி தைரியமாக நின்று நடந்ததைக் கூறமுடிகிறது என்று கேட்கிறார் அந்த ஊடகவியலாளர். அதற்கு, நான் புத்த மதத்தைச் சேர்ந்தவன், என்ன நடந்ததோ அது ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடந்துள்ளது.
ஆகவேதான் என்னால் உங்களிடம் தைரியமாக நின்று பேச முடிகிறது என்று கூறும் Jayasinghe, இளைஞர்களுக்கு ஒரு அறிவுரையும் கூறுகிறார். பெற்றோர் சொல்வதற்கு செவிகொடுங்கள், என் மகன் என் சொல்லைக் கேட்டு அந்த பாறையின் விளிம்புக்கு போகாமல் இருந்திருந்தால், அவன் இப்போது உயிருடன் இருந்திருப்பான் என்கிறார் அவர்.
ஒருவேளை உங்கள் மகனுடைய உடல் கிடைத்தால் எப்படி உணருவீர்கள் என அவரிடம் கேட்க, அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை, அவன் திரும்பி வரப்போவதில்லை, அவன் போய்விட்டான் என்கிறார் Jayasinghe. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்றால், அந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் அவர்.