விடுமுறைக்கு தீவுக்கு சென்றபோது மாயமான பிரித்தானியப் பெண்..சடலமாக கண்டெடுப்பு
ஸ்பெயினின் கேனரி தீவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியப் பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குடும்பத்துடன் சுற்றுலா
பிரித்தானியாவைச் 73 வயதான அன்னே பெய்லி என்ற பெண்ணொருவர் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான Fuerteventuraயில் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஹொட்டலில் அவர்கள் தங்கியதாக கூறப்படுகிறது. காலை நடைப்பயணத்திற்காக சென்றபோது அன்னே மாயமானதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சூன் 7ஆம் திகதி காலை 9.30 மணியளவில் அன்னே பெய்லியை காணவில்லை என அவரது மகன் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. அதில் தன்னார்வலர்களும், ஹொட்டல் ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
சடலமாக மீட்பு
இந்த நிலையில் Fuerteventura தீவில் உள்ள அதிகாரிகள் ஒரு பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் உடலைக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர். அது காணாமல் போன அன்னே பெய்லி தான் என்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
Corralejo Dunes இயற்கை பூங்காவில் அவரது சடலத்தை கைப்பற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து அன்னேவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உள்ளூர் பரிசோதனை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அன்னேவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் கருதுவதாக எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.