வீணான முதல் டி20 சதம்! மார்ஷின் ருத்ர தாண்டவத்தில் அவுஸ்திரேலியா மிரட்டல் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராபின்ஸன் வாணவேடிக்கை
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அப்போது அதிரடியில் இறங்கிய டிம் ராபின்ஸன் (Tim Robinson) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
மறுமுனையில் டேர்ல் மிட்செல் (34), பெவோன் ஜேக்கப்ஸ் (20) இருவரும் தங்கள் பங்குக்கு ஓட்டங்கள் சேர்க்க நியூசிலாந்தின் ஸ்கோர் உயர்ந்தது.
ருத்ர தாண்டவமாடிய ராபின்ஸன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் கடைசி வரை அட்டமிழக்காமல் 66 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் குவித்தது. ட்வர்ஷுய்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மார்ஷ் வாணவேடிக்கை
அதன் பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 31 ஓட்டங்களும், மேத்யூ ஷார்ட் 18 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசி வெளியேறினர்.
அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) சரவெடியாக அரைசதம் அடித்தார். அவர் 43 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் குவித்தார்.
டிம் டேவிட் அதிரடியாக 12 பந்துகளில் 21 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |