ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல வீரர் - என்ன காரணம் தெரியுமா?
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் நடப்பாண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைவதோடு வீரர்களுக்கான மெகா ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 1,214 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
இதனிடையே ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்கும் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதுவரை இரண்டு ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் பெங்களூரு அணிக்காக களமிறங்கி 27 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெகா ஏலத்தில் இருந்து ஸ்டார்க் விலகியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு 9.4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் காயம் காரணமாக அந்த தொடரில் அவர் விளையாடவில்லை.
இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தான் என்றும், ஆனால் அதற்காக என்னால் 22 வாரங்கள் பயோ பபுள் வளையத்தில் இருக்க முடியாது.இதன் காரணமாகவே நான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். என்னுடைய இந்த விலகலுக்கு வேறு எந்தக் காரணமும் கிடையாது என ஸ்டார்க் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.