உதவி கேட்டு கடிதம் எழுதிய மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்! நெகிழ்ச்சி தகவல்
தமிழகத்தில் உயர்கல்வி படிக்க உதவி கேட்டு கடிதம் அனுப்பிய பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்த நிலையில், அவர்களை நேரில் அழைத்து பேசிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபனா. 12-ஆம் வகுப்பு முடித்துள்ள இவர் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், படிப்பதற்கு போதிய பணவசதி இல்லாமல், ஏழ்மையில் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய நிலை குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த கடிதம் ஸ்டாலினின் கவனத்திற்கு செல்ல, உடனடியாக அது குறித்து பரிசீலனை செய்த அவர், ஷோபனாவுக்கு மதுரையில் இருக்கும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிபிஏ படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஷோபனா, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னுடைய நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றும், ஆனால் சென்னை செல்வதற்கு என்னிடம் பணவசதி இல்லை என்று கூறி, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், முதல்வர் நேற்றிரவு தேவர் ஜெயந்தி, பல்வேறு அரசு திட்ட பணிகளின் ஆய்வுகள், கொரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு உள்ளிட்டவைகளுக்காக மதுரை சென்றார்.
மதுரை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவருக்கு ஷோபனாவின் ஞாபகம் வரவே, உடனடியாக அவர் இருக்கும் திருவேடகம் கிராமத்திற்கு அரசு வாகனத்தை(கார்) அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த ஷோபனா குடும்பத்தினர், உடனடியாக காரில் ஏறிச் சென்று நேரில் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அப்போது முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் ஷோபானா உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார்.
உடனே ஸ்டாலின் அழுகாதம்மா, கவலைப்படாதீங்க, நல்லா படிங்க எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்க என்று அவரை தேற்றினார்.
அதன் பின், ஷோபனாவின் தங்கையிடம் என்ன படிக்கிறாய் என கேட்டு நன்றாக படிக்குமாறு தட்டிக் கொடுத்த அவர், ஷோபனா படிப்பதற்கு தேவையான புத்தகப்பை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஷோபனாவின் குடும்பம் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து போனது.