இனி ஆட்டோவில் தைரியமாக பயணம் செய்யலாம் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்
ஆட்டோக்களுக்கு QR குறியீடு ஒட்டும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
ஆட்டோக்களுக்கு QR குறியீடு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சென்னையில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு QR குறியீடு ஓட்டும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த QR குறியீடு, சென்னையில் இயங்கும் ஆட்டோ, கார் உள்ளிட்ட அனைத்து வாடகை வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவசரகால உதவி
இந்த QR குறியீடானது, ஓட்டுநரின் இருக்கைக்கு பின்பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும். அவசர காலங்களில் பயணிகள் இந்தQR குறியீட்டை Scan செய்யும் போது, அதில் SOS தோன்றும்.
இதனை அழுத்துவதன் மூலம், அந்த வாகனம் எங்கே செல்கிறது என்ற தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அதன் பின்னர், உடனடியாக அந்த வாகனத்திற்கு அருகே உள்ள காவல்துறை ரோந்து வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, பயணிக்கு தேவையான உதவி கிடைக்கும்.
இதன் மூலம், பயணியின் அலைபேசி எண்ணும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயணியை தொடர்பு கொண்டு உதவி கிடைத்ததா என கேட்டு உறுதி செய்யப்படும்.
அந்த QR குறியீடு, ஒவ்வொரு வாகனத்திற்கும், தனிப்பயனாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வாகனத்தின் உரிமையாளர், அவரின் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |