அப்பாவை எங்கே என கேட்ட முதல்வர் விஜய் - மு.க.ஸ்டாலின் கொடுத்த பதிலடி
அப்பாவை எங்கே என கேட்ட முதல்வர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
உங்கள் அப்பாவை காணோம்
சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், குட்டிக்கதை கூறி உங்கள் அப்பாவை காணோம் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டினார்.

முதல்வரின் பேச்சுக்கு திமுக நிர்வாகிகளை கொந்தளிக்க செய்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் பதிலடி
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இன்று திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மணமக்களை வாழ்த்திய மு.க.ஸ்டாலின் தன் மீதான முதல்வர் விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... “அப்பா எங்கே” என்று முதலமைச்சர் கேட்கிறார்.

அப்பாவ அங்க தேடாதிங்க! மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். நீங்க தேடுற இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்றைக்கும் நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்து ஏறக்குறைய 60 ஆண்டுகளாக, மக்களுக்காக செயலாற்றி வருகிறேன். நான் முதலமைச்சராக இருந்து பணியாற்றியதுபோல், வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.
மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில் இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில், இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில், இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.
வேறு எங்கேயும் என்னைத் தேட வேண்டிய அவசியமில்லை. நான் கோட்டையில்தான் இருக்கிறேன். மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும்வரை, இந்த மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |