உங்க பயம் எனக்கு பிடிச்சிருக்கு சி.எம் சார் - முதல்வர் விஜய்யை சீண்டிய மு.க.ஸ்டாலின்
mk stalin says i lilke your fear cm sir: உங்க பயம் எனக்கு பிடிச்சிருக்கு சி.எம் சார் என மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
இதில் பேசிய அவர், "நீங்கள் அடிக்கடி செய்திகளில் பார்த்துப் பழகிய முகம்தான் பரந்தாமன். சிறப்பான பேச்சால், தவெக ஆட்சியை வெளுத்து வாங்குகிறார். ஆட்சியின் அவலங்களைச் சிறப்பாக எடுத்துரைப்பவர்.

கேஸ் போட்டும் மிரட்ட முடியாது; சூட்கேஸ் கொடுத்தும் ரேட் பேச முடியாது. சட்டமன்றத்தில் இவரின் குரல் உங்களுக்காக ஒலிக்க வேண்டும்.
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்தான் கடந்த 5 ஆண்டுகளில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனால், 5 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் சொல்கிறார்.
இதுபோல, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சிக்குத் தாவிய குதிரை பேர அரசியல் இதுவரை நடந்ததில்லை. தவெக ஆட்சியில் அப்பட்டமான குதிரைபேரம் நடந்துள்ளது என்று சொன்னால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வந்தார்கள் என முதலமைச்சர் விஜய் விளக்கம் கொடுக்கிறார்.
இது பெரிய கண்டுபிடிப்பு. கட்சி தாவல் சட்டத்திற்குப் பயந்து, பொய்யான தகவலைச் சொல்லி ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே சி.எம். சார்!
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என அமைச்சரே சொல்கிறார். இந்த லட்சணத்தில்தான், குதிரை பேரம், கழுதை பேரம் இல்லை என முதலமைச்சர் பேசுகிறார். அவருக்குப் பொருத்தமான பெயரை அவரே வைத்துக்கொள்ளட்டும்.
உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சி.எம். சார்
தவெக வேட்பாளரை விரட்டியடித்து, சுயமரியாதை உள்ளவர்கள் நாங்கள் என்பதை மதுராந்தகம் மக்கள் நிரூபித்துள்ளார்கள். உங்களின் ரோஷத்திற்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

‘தவெக சார்பில் ஒரு நாயை நிறுத்தி வைத்துக்கூட வெற்றி பெறுவோம்’ எனத் திமிராகப் பேசுகிறார்கள். எவ்வளவு கேவலமான நினைப்பு! இதையெல்லாம் கேட்கவே அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். இளக்காரமாக நினைக்கிறார்கள்.
நாம் செய்தது ஒரே ஒரு தவறுதான். தேர்தலுக்கு முன்பு தவெகவை ஒரு பொருட்டாகவே நாம் நினைக்கவில்லை. அதுதான் நாம் செய்த ஒரே தவறு. கொள்கை எதிரியோடு மோதிவிட்டு, கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். எஸ்.ஐ.ஆர்., வாக்குரிமைப் பறிப்பு போன்றவற்றால் நாம் வெற்றியை இழந்தோம்.
சட்டமன்றத் தேர்தலில் தவெக அலை வீசியிருந்தால், 150 இடங்களை வென்றிருப்பார்கள். பெரும்பான்மை கிடைக்காமல் இருந்திருக்கமாட்டார்கள். திமுகவுக்கு மக்கள் வழங்கிய ஆதரவு ஓட்டுகளால்தான் தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.
என்னதான் முதலமைச்சர் விஜய் ஹை பிச்சில் கத்தினாலும், இதுதான் உண்மை. இதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மையை ஏற்க மனமில்லாமல்தான் குதிரைபேர அரசியலைச் செய்கிறார்.
முதலமைச்சர் தொகுதியான பெரம்பூருக்குக்கூட ஒருமுறைதான் விஜய் சென்றிருக்கிறார். ஆனால், தோல்வி பயத்தில் தெருத்தெருவாக சுற்றுகிறார்.
பொதுவாக, இடைத்தேர்தல் என்றால் முதலமைச்சராக இருப்பவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தனது ஆட்சி மீது நம்பிக்கை இல்லாமல்தான் விஜய் இடைத்தேர்தலில் அலைந்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக 10 இடங்களில் கூட பிரச்சாரம் செய்யாதவர், வண்டியைவிட்டுக்கூட இறங்காதவருக்கு இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்தீர்களா?
மனித நடமாட்டம் இல்லாத சந்துக்குள்கூட ரோடு ரோடாகச் சுற்றுகிறார். இப்போதுதான் அவர் கால்தரையில் படுகிறது. உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சி.எம். சார்" என பேசியுள்ளார்.