இரவில் உடற்கூறாய்வு ஏன்? கரூர் துயரத்துக்கு காரணம்: சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்
கரூர் துயர சம்பவம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழக சட்டமன்றம் நேற்று கூடிய நிலையில், கரூர் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் மற்றும் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டசபை மீண்டும் கூடிய நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் துயர சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
கரூரில் தவெக கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் விஜய் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார்.
7 மணி நேர தாமதம்
இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வர தொடங்கினர். செப்.27 அன்று தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார்.
பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இரவு 7 மணிக்கு கரூருக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணி கடந்து, 7 மணி நேரம் கழித்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
இரவில் உடற்கூறாய்வு ஏன்?
வேலுச்சாமிபுரத்தில் கூடிய கூட்டத்திற்கு உணவு குடிநீர் என எதுவும், மக்கள் சந்திப்பு நடத்திய கட்சி சார்பில் வழங்கப்படவில்லை. காலை முதலே வேலுசாமிபுரத்தில் மக்கள் திரண்டனர். இயற்கை உபாதைகளுக்கு பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் அதிமுகவின் கூட்டம் நடந்துள்ளது. அங்கு கூடியவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது.
கூட்டநெரிசல் ஏற்பட்டபோது ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்தனர், தகரக்கொட்டகையை அகற்றி வெளியேற முயன்றனர். இதன் காரணமாக அசம்பாவிதத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் உடல்களை பாதுகாக்க போதிய இட வசதி இல்லாததாலேயே உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட்டன. சம்பவத்தன்று நள்ளிரவு 1.47 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.10 மணி வரையில் 39 உடற்கூராய்வுகள் நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |