தமிழக எம்.எல்.ஏ-விற்கு 1 ஆண்டு சிறை - உறுதிப்படுத்திய நீதிமன்றம்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவரான ஜவாஹிருல்லா, 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓராண்டு சிறை
மேலும், ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலி என்பவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் மு.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |