செல்போனில் பேசும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! மீறினால்?
செல்போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது. அந்தளவுக்கு செல்போன்கள் மனிதர்களை ஆக்கிரமித்துள்ளது. ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு என்ற நிலைமாறி பல்வேறு தகவல் தொடர்பு பணிகளையும் செய்யும் வசதி கொண்டதாக மொபைல் போன்கள் மாறிவிட்டன.
மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன.
மொபைல் போனின் அழைப்பு மணியின் அளவை குறைவாகவே வைத்திருங்கள். சிலர் அதிக சத்தமாக அழைப்பு மணியின் அளவை வைத்திருப்பார்கள். அதனால் அது திடீரென்று அலறும் போது அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடையும் நிலை ஏற்படும்.
குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ள செய்தியை தெரிவிக்கும் பீப் ஒலியை நீண்ட நேரம் ஒலிக்கும் வகையில் அமைக்க வேண்டாம். ஒரு முறை பீப் ஒலி வரும் வகையில் அமைப்பதே சிறந்தது.
பொது இடங்களில் இருக்கும் போது உங்கள் குரலை உயர்த்தி மொபைல் போனில் பேச வேண்டாம். இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். மேலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்கும் நிலையும் ஏற்படும்.
பொது இடங்களில் இருக்கும் போது மொபைல் போனில் விளையாட வேண்டாம். அப்படி விளையாடும்போது ஒலி அளவை குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பொது இடங்களில் மற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க கூடாது.
பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், விமானப்பயணங்கள் போன்ற இடங்களில் உங்கள் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைக்க வேண்டும். அதுபோல சினிமா அரங்கம் மற்றும் விழாக்களின் போது மொபைல் போனில் அழைப்பு வந்தால் அங்கிருந்து வெளியே சென்று பேசுங்கள்.