லண்டனில் இரவு தனியாக நடந்து சென்ற இளம் ஜோடியை தாக்கிய கும்பல்! பெண் தலைமுடியை பிடித்து இழுத்து அராஜகம்.. சிசிடிவி புகைப்படம்
லண்டனில் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த ஒரு ஜோடியை கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்தியவர்களின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
தெற்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதி இரவு 10 மணிக்கு மேல் நடந்துள்ளது. 30களில் உள்ள ஆண் ஒருவர் தனது காதலியுடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை அணுகிய நான்கு பேர், ஜோடியை மிரட்ட துவங்கினார்கள். பின்னர் அந்த ஆணின் முகத்திலும் உடலிலும் கடுமையாக தாக்கினார்கள்.
அவர்களை தடுக்க அந்த பெண் முயன்ற போது அவர் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டனர். இதன்பிறகு மீண்டும் அந்த நபரை தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து நால்வரும் கிளம்பி சென்றனர்.
இந்த சம்பவத்தில் மயக்கமடைந்த பாதிக்கப்பட்ட நபருக்கு எலும்புமுறிவும் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நால்வரில் மூவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
