பொதுவெளியில் இந்தியரை கேலி செய்த இளவரசர் ஹரி: செமத்தியாக வெளுத்த இளவரசி டயானா
இளவரசர் ஹரி லண்டன் பேருந்தில் இந்தியர் ஒருவரை கேலி செய்த நிலையில், தாயார் இளவரசி டயானாவின் கையால் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டதாக புதிய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் பேருந்தில் பயணம்
சம்பவம் நடக்கும் போது இளவரசர் ஹரிக்கு ஒரு 8 வயதிருக்கலாம் என கூறப்படுகிறது. டயானா தமது பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரியை அழைத்துக் கொண்டு லண்டன் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயண ஏற்பாடுகளை டயானாவின் பொலிஸ் பாதுகாப்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் கென் வார்ஃப் முன்னெடுத்துள்ளார். இவர்கள் சென்ற பேருந்தில் இந்திய மாகாணம் பஞ்சாபை சேர்ந்த சீக்கியர் ஒருவர் நடத்துனராக பணியாற்றியுள்ளார்.
அவரது பஞ்சாபி கலந்த ஆங்கில உச்சரிப்பை ஹரி தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார். டயானா பலமுறை கண்டித்தும் ஹரி கேலி செய்வதை விடுவதாக இல்லை. இதை அனைத்தும் கவனித்தும் கண்டுகொள்ளாமல் தமது பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளார் அந்த சீக்கிய நடத்துனர்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த டயானா, பொலிஸ் அதிகாரி கென் வார்ஃபிடம், தங்கள் பயணத்தை உடனே கைவிட வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, டயானா, கென், வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் கிரீன் பார்க் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கியுள்ளனர்.
ஹரியை ஓங்கி அறைந்த டயானா
பேருந்தில் இருந்து இறங்கியதும் தான் தாமதம், டயானா தமது மகன் ஹரியை ஓங்கி அறைந்துள்ளார். பின்னர், இதுபோன்று இனி ஒருபோதும் செய்யாதே எனவும் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
@getty
மட்டுமின்றி, கென் வார்ஃபிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதவும் ஹரியை டயானா கட்டாயப்படுத்தியுள்ளார். தமது பிள்ளைகள் எந்தவகையிலும் இனவாதியாக மாறுவதை டயானா விரும்பியதில்லை என்றே அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான ஒரு சூழலில் தான் தமது முதல் பிள்ளை தொடர்பில் அப்போதைய இளவரசர் சார்லஸ் இனவாத கருத்தை முன்வைத்ததாக ஹரி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது பல ஆண்டுகளாக தமது குடும்பத்தில் பன்முகத்தன்மையை மேம்படுத்த முயன்றுவரும் பிரித்தானியாவின் எதிர்கால மன்னருக்கு பரிகசிக்கத் தக்க அவமானம் எனவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.