1 ரூபாய் வரி செலுத்தினால் பிரதமர் மோடி 2 ரூபாய் திருப்பி கொடுத்துள்ளார்: அண்ணாமலை
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தங்கம் தென்னரசு கூறியது..
தமிழக அரசின் மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், கேள்விகளையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிந்த செய்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் தெரியவில்லை.
எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிர்மலா சீதாராமன் பேசியது, தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது போல இருக்கிறது" என்று கூறினார்.
அண்ணாமலை ட்வீட்
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன்.
தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள். தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும் மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார்.
அந்த 30,000 கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம். DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம்.
முறைகேடாக கொள்ளையடித்த மக்கள் வரிப்பணத்தை முதலீடாக கொண்டுவருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. விளம்பரத்திற்காக ஆட்சி நடத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் பொழுதை போக்கும் நீங்கள் இனியும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.
மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுத்துள்ளது தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது.
அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |