மோடியின் இலங்கை பயணம் - கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள் என்ன?
கடந்த 3ஆம் தேதி தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் மோடி, பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
மோடி இலங்கை பயணம்
இதனையடுத்து, நேற்று இலங்கை சென்ற அவரை, வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெரத் உள்ளிட்ட அமைச்சர்கள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.
இலங்கை அதிபராக அநுர குமார திஸநாயக்க பதவியேற்ற பிறகு, இலங்கைகைக்கு வருகை தந்துள்ள முதல் வெளிநாட்டு தலைவர் மோடி ஆவார். முன்னதாக அநுர குமாரவும் பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியை, இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க சந்தித்து பேசினார்.
இதை தொடர்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய ஒப்பந்தங்கள்
இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் இணை பயிற்சிகள், பயிற்சி மற்றும் வன்பொருள் வழங்கல், கூட்டு கடல்சார் கண்காணிப்பு ஆகியவை நிறுவனமயமாக்கப்படும்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த இராணுவ ஒப்பந்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இது குறித்து பேசிய இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, "டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது முக்கியம். இந்தியாவின் ஆதார் போன்ற இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை அமல்படுத்த ஒரு பெரிய திட்டத்தை மானிய உதவி மூலம் ஆதரிப்போம்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு, இந்தியா 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியது. கடன் மறுசீரமைப்பு மற்றும் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்துடன் உதவி தொடரும்" என தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, இந்தியா உதவியுடன் அமைக்கப்படும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் மெய்நிகர் அடிக்கல் நாட்டு விழா மற்றும் இரண்டு ரயில் திட்ட தொடக்க விழா ஆகியவற்றை தொடங்கி வைக்க உள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
மேலும், 1987 -1990 காலகட்டத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) 1,155 இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்த கொழும்பில் உள்ள IPKF நினைவுச்சின்னத்திற்கு சனிக்கிழமை செல்வார்.
அதை தொடர்ந்து, இருவரும் அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி கோவிலில் மரியாதை செலுத்த உள்ளனர்.
மோடி இலங்கை செல்லும் முன், கச்சதீவை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் தேர்தல் வர உள்ள நிலையில், கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சனை தொடர்பாக மோடி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |