இந்தியாவுக்கு மொயீன் அலி வருவதில் சிக்கல் - சென்னை அணிக்கு அடுத்த தலைவலி
ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் சென்னை அணியில் முக்கிய வீரர் இணையாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பாண்டு தொடருக்காக சென்னை அணியில் தோனி, ருத்துராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ஜடேஜா ஆகிய 4 வீரர்களும் நேரடியாக தக்க வைக்கப்பட்டனர்.
மற்ற சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் மொயின் அலி இதுவரை இந்தியா வந்து சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடாதது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த சீசனில் முக்கியமான நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவது, தேவையான நேரத்தில் விக்கெட் எடுப்பது என்று அசத்திய மொயீன் அலிக்கு விசா விண்ணப்பித்தும் இதுவரை மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இங்கு வந்து 3 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டி இருப்பதால் அவர் பயிற்சி இல்லாமலேயே இந்த தொடரில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.