பிரித்தானிய எரிபொருள் பிரச்சினை: லண்டனில் பெட்ரோல் நிலையம் நடத்தும் இந்திய பெண்ணைத் தாக்கிய நபர்... பதறவைக்கும் வீடியோ
பிரித்தானியபெட்ரோல் தட்டுப்பாட்டால், அடிக்கடி கைகலப்பு ஏற்படுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்திய நிகழ்வாக, வடக்கு லண்டனில் பெட்ரோல் நிலையம் நடத்தும் இந்தியப் பெண் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வடக்கு லண்டனிலுள்ள Belsize Park என்ற இடத்தில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருபவர் Nerali Patel (38).
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பெட்ரோல் தீரும் நிலையிலிருந்ததால், பெட்ரோல் இல்லை என்ற போர்டு ஒன்றை வைத்துவிட்டு, புதிதாக யாரும் வராதபடி தடை ஏற்படுத்திவிட்டு, ஏற்கனவே காத்திருந்த இருவருக்கு கடைசியாக பெட்ரோல் போட்டிருக்கிறார் Nerali.
அப்போது இருவர் தடையை தாண்டி உள்ளே வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நான் பெட்ரோல் போட வந்துவிட்டேன், போடாமல் போகமாட்டேன் என கத்திவிட்டு, அவரே பெட்ரோல் போடும் குழாயை எடுத்திருக்கிறார்.
Nerali, நீங்கள் அதை எடுத்தும் பயனில்லை, அதில் பெட்ரோல் இல்லை என்று கூறி, பெட்ரோல் குழாயை வாங்க முயல, அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த அந்த நபர், இன ரீதியாகவும் Neraliயை விமர்சித்திருக்கிறார்.
அந்த குழாயின் முனையிலுள்ள உலோகப் பகுதியால் Neraliயைத் தாக்கிய அவர், Neraliயைக் கீழே பிடித்துத் தள்ள, பொத்தென்று கீழே விழுந்திருக்கிறார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான Nerali கீழே விழும் பதறவைக்கும் காட்சியை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
பொதுவாக இந்த மாதிரி நேரங்களில் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். ஆனால், நான் கீழே விழுந்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரைப் பிடித்துக்கொண்டார்கள் என்கிறார் Nerali.
10 நிமிடங்களுக்குள் பொலிசார் வந்து அந்த நபரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், இந்த தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்புதான், பெட்ரோலுக்காக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டவர்களை பிரித்து விட்டிருக்கிறார் Nerali என்பது குறிப்பிடத்தக்கது.