ரூ. 42 லட்சம் மோசடி.., நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் பொலிஸாரால் கைது
நடிகர் சூர்யா வீட்டின் பணிப்பெண் சுலோச்சனா பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு பணமோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த மோசடியில் தற்போது சூர்யாவின் தனிப்பாதுகாவலர் அந்தோணி ராஜும் சிக்கி பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
சுலோச்சனா தனது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து இந்தமோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறைந்த விலைக்கு நகைகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மாதம் ரூ. 5500 கட்டினால் மாதம் தோறும் ஒரு கிராம் தங்க நாணயம் கிடைக்கும் என்று கூறி பலரிடம் பணத்தை பெற்றுள்ளனர்.
அதேபோல் வாரந்தோறும் ரூ.6500 கட்டினால் ஒவ்வொரு வாரமும் ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் கூறி பணத்தை பெற்றுள்ளனர்.
முதலில் இவர்கள் நல்ல தங்கத்தைக் கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தி அதன்பின் அவர்கள் மூலமாக பலரைத் தொடர்பு கொண்டு பணத்தைக் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த கும்பலிடம் தற்போது சூர்யாவின் தனிப்பாதுகாவலர் அந்தோணி ராஜும் சிக்கி சுமார் 42 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தோணி ராஜ் அளித்த புகாரின் பேரில், மாம்பலம் பொலிஸார் சுலோச்சனா, அவரது மகன்கள் மற்றும் சுலோச்சனாவின் சகோதரி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததும் சூர்யா உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் பணமோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |