மொந்தா(Montha) பெயர் காரணம் - புயலுக்கு பெயர் சூட்டுவது யார்? என்ன விதிமுறைகள்?
புயலுக்கான பெயரை யார் சூட்டுவது, என்ன விதிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மொந்தா(MONTHA) பெயர் காரணம்
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் மொந்தா புயல்(MONTHA) உருவானது. நாளை காலைக்குள் இது தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கான பெயரை தாய்லாந்து சூட்டியுள்ளது. இதற்கு அழகான அல்லது மணம் கொண்ட பூ என்று பொருள் ஆகும்.
புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
புயல்களுக்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் உருவானால் விரைவாக அடையாளம் காணவும், குழப்பத்தை தவிர்க்கவும், புயல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கு பெயர் சூட்டப்படுகிறது.
தொடக்கக் காலத்தில், புயல்களுக்குக் கத்தோலிக்கப் புனிதர்கள், படகுகளின் பெயர்கள் என்று தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டன.
1900களின் நடுப்பகுதியில், பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. 1900 ஆம் ஆண்டின் இறுதியில், தெற்கு அரைக்கோளத்தில் உருவான புயல்களுக்கு ஆண்பால் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

புயல் மற்றும் சூறாவளிகளுக்கு பெயரிடுவது உலக வானிலையியல் அமைப்பு (WMO) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதில், உலகம் முழுவதும் 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இது வடக்கு அரைக்கோளப்பகுதியில் உள்ள நாடுகளை 4 மண்டலங்களாகவும், தெற்கு அரைக்கோளப்பகுதியில் உள்ள நாடுகளை 4 மண்டலங்களாகவும், உலகம் முழுவதையும் 8 தட்பவெப்ப மண்டலங்களாகப் பிரித்திருக்கிறது.
வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உருவாகும் புயல்களுக்கு, 13 நாடுகள் பெயர்களை பரிந்துரை செய்கின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், மாலத்தீவு, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், ஈரான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

இந்த 13 நாடுகளும், 13 பெயர்களைப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டு மொத்தம் 169 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் புயல் உருவாகும் போது, இந்த பெயர்களில் ஒன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வழியாக சூட்டப்படுகிறது.
புயல் பெயருக்கான விதிமுறைகள்
இந்த புயலுக்கு பெயர் சூட்டுவதில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.
அரசியல் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமய நம்பிக்கைகள், பண்பாடுகள் மற்றும் இன சார்பில்லாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்.
உலகளவில் எந்த சமூகத்தையும் அவமதிக்காத வகையில் அந்த பெயர்கள் இருக்க வேண்டும்.
பெயர் உச்சரிப்பதற்கு எளிமையானதாக இருக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பரிந்துரைத்த நாடுகள் குரல் வழியுடன் வழங்க வேண்டும்.

பெயரின் அதிகபட்ச நீளம் ஆங்கில மொழியில் 8 எழுத்துகளுக்கு அதிகமாக இருக்க கூடாது.
உலகம் முழுவதுமுள்ள மண்டல சிறப்பு வானிலை மையம் வைத்திருக்கும் பட்டியலில் அந்த பெயர் இருக்கக் கூடாது.
பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு வல்லுநர் குழுவுக்கு உரிமை உண்டு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |