கனேடியர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பயன்பாடு: ஆய்வு முடிவுகள்
More Canadians are using cannabis daily than are drinking alcohol daily: கனடாவில், மதுபானம் அருந்துபவர்கள் எண்ணிக்கையைவிட, கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
கனடாவில், தினமும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அதிகரித்துவரும் போதைப்பொருள் பயன்பாடு
கனடாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, கனேடியர்களில் 5.7 சதவிகிதம் பேர், அதாவது, 1.8 மில்லியன் கனேடியர்கள் தினமும் கஞ்சா பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.

தினமும் அல்லது கிட்டத்தட்ட தினமும் மது அருந்தும் கனேடியர்கள் எண்ணிக்கையோ 5.2 சதவிகிதம்தான்.
அதாவது, தினமும் அல்லது கிட்டத்தட்ட தினமும் மது அருந்தும் கனேடியர்கள் எண்ணிக்கையைவிட, தினமும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.
ஆய்வை தலைமையேற்று நடத்திய, போதைக்கு அடிமையானோர் ஆய்வு மையம் ஒன்றின் தலைவரான ஆண்ட்ரே மெக்டொனால்ட் என்பவர், அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார்.
இந்த ஆய்வு கஞ்சா பயன்படுத்தும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பதை மட்டும் கூறவில்லை.
சிகரெட் மற்றும் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, புற்றுநோய் போன்ற அபாயங்கள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களால், புகைபிடித்தல் குறைந்துவருவதுடன், மது அருந்துதலும் குறைந்துவருகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
ஆக, சிகரெட் பாக்கெட்கள் மீது கொடுக்கப்படும் புகைப்படங்களுடனான எச்சரிக்கைகள் போல, கஞ்சா குறித்தும் புகைப்படங்களுடனான எச்சரிக்கை கொடுப்பதால், இளைஞர்கள் கஞ்சா பயன்பாட்டைக் குறைக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
எப்படி தினமும் புகை பிடிப்பதும் மது அருந்துவதும் உடல் நலத்துக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துமோ, அதேபோல, தினமும் கஞ்சா பயன்படுத்துவதும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்!