பிரித்தானியாவில் இந்த வயதினரிடையே இப்போது கொரோனா அதிகம் காணப்படுகிறது! வெளியான புள்ளி விவரம்: எச்சரிக்கை தகவல்
கொரோனா வழக்குகள் இப்போது 10 முதல் 19 வயதிற்குட்பட்டோரிடையே அதிகம் காணப்படுவதாக, பொது சுகாதார இங்கிலாந்தின் புதிய அறிக்கை காட்டுகிறது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அந்தளவிற்கு இல்லை. சமீப நாட்களாகவே கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இருப்பினும் இதுவரை பிரித்தானியாவில் கொரோனாவால் 4.31 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 126000 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது ஐரோப்பாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதால், ஊரடங்கில் எந்த ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர பிரித்தானிய அரசு முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பொது சுகாதார இங்கிலாந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், தற்போது 10 முதல் 19 வயதிற்குட்பட்ட நபர்களிடையே கொரோனா பரவல் அதிகம் இருப்பதாகவும், இவர்களைத் தொடர்ந்து30 முதல் 39 வயதுடையவர்கள் மற்றும் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆரம்பத்தில் அதிக வயதுடையரே இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 70 முதல் 79 வயதிற்குட்பட்டவர்களிடம் மிகக் குறைந்த அளவே இந்த பாதிப்பு உள்ளதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கொரோனாவிற்கான மருத்துவமனையில் சேர்க்கை 85 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் மிக அதிகமாக உள்ளதாக வாராந்திர கண்காணிப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, மார்ச் 15 முதல் வைரஸிற்கான மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 100,000-ல் 3.49- பேராக குறைந்துள்ளது.
இதுவே முந்தைய ஏழு நாட்களில் 100,000-க்கு 4.68-பேர் பாதிக்கப்படுவதாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகம் பேர் மருத்துவமனை சேர்க்கும் இடமாக யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் உள்ளதாகவும், ஆனால் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பெரும்பாலான பிராந்தியங்களில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா உடனான தீவிர சிகிச்சைக்கான சேர்க்கைகளும் குறைந்துள்ளது. முந்தைய வாரம் 100,000-பேரில் 0.37-பேர் பாதிக்கப்படுவதாக இருந்தது. தற்போது 100,000-க்கு 0.26-ஆக குறைந்துள்ளது.
கிழக்கு மிட்லாண்ட்ஸில் கொரோனா வைரஸிற்கான அதிக அவசர சிகிச்சை சேர்க்கை விகிதங்கள் இப்போது காணப்படுகின்றன, அதே நேரத்தில் கொரோனாவால் மிகவும் தீவிரமான மருத்துவ சிகிச்சை தற்போது 65 வயது முதல் 74 வயதினருக்கிடையே தேவைப்படுகிறதாம்.
கொரோனா தடுப்பூசி இப்போது 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு 90 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதம் பேரையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

