பிரித்தானியாவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கூடுதல் நிதி அறிவிப்பு!
பிரித்தானியாவில் பாலியல் பலாத்காரம் மற்றும் பிற துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஆதரவு சேவைகளுக்காக கூடுதலாக 40 மில்லியன் பவுண்ட் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சொந்த வீட்டிலேயே துஷ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பல முக்கிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதில் பிரித்தானியா விதிவிலக்கு அல்ல.
சமீபத்தில் பிரித்தானியாவின் வீட்டு மற்றும் குடும்ப வன்முறை ஆணையர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் மற்றும் பிற துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளுக்கு தேவை அதிகரித்திருப்பதாக எச்சரித்திருந்தார்.
அதற்கேற்ப, காவல்துறை சமீப காலமாக பல துஷ்பிரயோக வழக்குகளை பதிவுசெய்துவருகிறது. மேலும், பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொண்டு நிறுவனங்களின் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உதவி கேட்பவர்களின் விகிதம் 200% அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் பலாத்காரம் மற்றும் பிற வீட்டு துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஆதரவு சேவைகளுக்காக கூடுதலாக 40 மில்லியன் பவுண்ட் நிதியை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்த தொகை அதிக ஊழியர்களை நியமிக்கவும், ஹெல்ப்லைன் விரிவாக்கம் மற்றும் தொலைநிலை ஆலோசனைகளுக்கு உதவியாக இருக்கும் என அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த தொகை ஒரு குறுகிய கால நிதியுதவி தான் என்றும் மேலும் இந்த விடயத்தில் நீண்ட கால அணுகுமுறை தேவை என்றும் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.