உலகின் பல நாடுகளில் சாக்லேட்டில் பயங்கர நோய்க்கிருமிகள்: கனடாவிலும்...
உலக நாடுகள் பலவற்றில் சாக்லேட்டுகளில் பயங்கர நோய்க்கிருமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
ஜேர்மனியில் சில சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
பிரித்தானியாவிலும் அந்த கிருமி பரவி வரும் நிலையில், மூன்று வயது சிறுமி ஒருத்தி அந்தக் கிருமியால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதேபோல், அமெரிக்காவிலும் அதே சாக்லேட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கனடாவிலும் Ferrero Canada என்ற நிறுவனத் தயாரிப்பான Kinder பிராண்ட் சாக்லேட்டுகளில் 10 வகை சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா கிருமிகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவை திரும்பப் பெறப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மொத்தம் 23 வகை சாக்லேட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி அறிவித்துள்ளது. அவற்றில் சால்மோனெல்லா பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்த சாக்லேட்டுகளை மக்கள் வாங்கியிருந்தால் அவற்றை உண்ணவேண்டாம் என்றும், அவற்றை யாராவது சாப்பிட்டு அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது