கடலில் காணப்பட்ட 15,000க்கும் அதிகமான குச்சிகள்: கனடாவில் 1,300 ஆண்டுகளாக நீடித்த மர்மம் விலகியது
கனேடிய மாகாணமொன்றில் 1,300 ஆண்டுகளாக கடலுக்கடியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் குச்சிகள் குறித்த மர்மம் விலகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில், கடல் தண்ணீருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குச்சிகள், பல ஆண்டுகளாக வரலாற்றாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவந்தன.
அப்பகுதியில், தண்ணீர் மட்டம் குறையும்போது கடலுக்குள்ளிருந்து 15,000க்கும் அதிகமான குச்சிகள் வெளிப்படும்.
தற்போது, தொல்பொருள் ஆய்வாளர்கள் அவை என்ன என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அவை, சுமார் 100 முதல் 1,300 ஆண்டுகளுக்கு முன் கனடாவின் முதல் பூர்வக்குடியினரால் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணிகள் என தெரியவந்துள்ளது.
K'ómoks இன மக்களான சுமார் 12,000 பேர் இந்த கண்ணிகளில் சிக்கும் மீன்களை நம்பித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்களின் கடும் முயற்சிக்குப்பின், அப்பகுதியில் காணப்படும் 150,000 முதல் 200,000 குச்சிகளும், 300 மீன்பிடி கண்ணிகள் என தெரியவந்துள்ளது.
இந்த குச்சிகளை இதயம் அல்லது அம்பு வடிவில் கடலின் ஆழமற்ற இடங்களில் பதித்து வைக்கிறார்கள். பெரிய கடல் அலைகள் வரும்போது அவற்றுடன் மீன்களும் வர, அலை திரும்பும்போது, அவற்றுடன் வந்த மீன்கள் மட்டும் இந்த குச்சிகளால் அமைக்கப்பட்ட கண்ணிக்குள் சிக்கிக்கொள்ள, அவற்றை எளிதாகப் பிடித்துள்ளார்கள் அந்த பூர்வக்குடியினர்.
ஆனால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த புது நாடுகளைத் தேடி வருவோர், வர்த்தகர்கள் முதலானோர் வந்ததைத் தொடர்ந்து இந்த பாரம்பரியம் மறைந்துபோயுள்ளது.
மேற்கத்திய நாட்டவர்கள் கொண்டு வந்த நோய்கள் பூர்வக்குடியினரைத் தாக்க, மேற்கத்திய நாட்டவர்கள் பூர்வக்குடியினரின் கலாச்சாரத்தை இழக்க கட்டாயப்படுத்த, அந்த பூர்வக்குடியினர் வாழ்ந்த அந்த இடம்தான் இப்போது பிரிட்டிஷ் கொலம்பியாவாகியுள்ளது!
90 சதவிகித பூர்வக்குடியினர் இறந்துபோக, பின்னிருந்தவர்களுக்கு இந்த மீன் பிடித்தல் போன்ற தொழில்நுட்பங்களைக் குறித்த அறிவை இழந்துபோக, இப்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்து பழைய விடயங்களை நினைவுபடுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது உண்மையாகவே வருந்தத்தக்க விடயம்தான்...