யார் எதிர்த்து வந்தாலும் தயாரா இருக்காங்க! இந்த அணி தான் உலகக்கோப்பையை தூக்கும்...பிரபல வேகப்பந்து ஜாம்பவான் கருத்து
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் வெல்லும் அணியாக நியூசிலாந்து இருக்கும் என அந்த அணிக்கு தனக்கு ஆதரவை தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் மோர்னி மோர்க்கல்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெறள்ள நிலையில் நியூசிலாந்து - அவுஸ்திரேலியா மோதுகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு தனது ஆதரவை தென்னாப்பிரிக்க வேகப்பந்து ஜாம்பவான் மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த தொடர் முழுவதும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மேல் தான் வெளிச்சம் இருந்தது. ஆனால் என் மூளைக்குள் ஒரு சிறிய குரல் ஒலித்தபடியே இருந்தது, அது 'நியூசிலாந்தை மறந்துவிடாதீர்கள்’ என்பது தான்.
அவர்கள் தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்கள் ஆவார்கள். கடந்த 50-ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ளனர். கேன் வில்லியம்சன் என்னும் ஒரு உத்வேகம் தரும் தலைவரை அந்த அணி கொண்டுள்ளது.
அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்து ஏற்கனவே ஒரு பெரிய தடையை கடந்துவிட்டதால், இறுதி போட்டியில் தங்கள் எதிரிகள் யார் என்பதை நியூசிலாந்து பொருட்படுத்தாது.
தங்களைத் தயார்படுத்திக் கொள்வதிலும், தாங்கள் கட்டுப்படுத்தக்கூடியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் அவர்களின் கவனம் இருக்கும். யார் எதிர்த்து வந்தாலும், அவர்கள் தயாராக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.