ஐரோப்பாவிலேயே சுவிட்சர்லாந்தில் தான் இந்த பரிதாப நிலை: வெளிவரும் பகீர் தகவல்
மக்கள்தொகையின் விகிதத்தில், மேற்கு ஐரோப்பாவில் உள்ள எந்த நாட்டிலும் சுவிட்சர்லாந்து போன்ற தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுகாதார அமைப்புகள் தற்போது மீண்டும் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளதுடன், முக்கிய உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளும் இதனால் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் இதனால் ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு சிகிச்சை தேடிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள மொத்த தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில் 81% நோயாளிகளால் நிரம்பியுள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர் கொரோனா நோயாளிகள் எனபது மட்டுமின்றி, இதன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா தொற்றால் மருத்துவமனையை நாடுவோரின் விகிதம் சுவிஸில் அதிகம் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் மில்லியன் மக்களில் 34.8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். பிரான்சில் இந்த எண்ணிக்கை 33.7 எனவும் ஸ்பெயினில் 31.9 எனவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் பிரித்தானியா அல்லது போர்த்துகலில் இந்த எண்ணிக்கை சரிபாதிக்கும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தில் குறைவான தடுப்பூசி விகிதமே அதிகமானோர் மருத்துவமனையை நாட காரணமாகவும் கூறப்படுகிறது.