நடுரோட்டில் தாயையும் இரண்டு மகள்களையும் கத்தியால் குத்திய நபர்... பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் நிகழ்ந்த பரிதாபம்
கடந்த திங்கட்கிழமையன்று, கனடாவின் தலைநகரில் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்ணால் கண்ட ஒருவர் நடந்ததை விவரித்துள்ளார்.
கனடா தலைநகர் Ottawaவில் உள்ள Anoka Street என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாழும் Scott Babbitt என்பவர், வெளியே யாரோ அலறி சத்தமிடுவதைக் கேட்டு, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது, 21 வயது நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொல்வதை அவர் கண்டுள்ளார்.
நடந்தது என்னவென்றால், அந்த 21 வயது நபர், Anne-Marie Ready (50) என்ற பெண்ணையும் அவரது மகளான Jasmine Ready (15) என்ற இளம்பெண்ணையும் கத்தியால் குத்தியிருக்கிறார். அதில் Anne-Marieயும் அவரது மகளான Jasmineம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, அடுத்ததாக Anne-Marieயின் இன்னொரு மகளையும் அவர் கத்தியால் குத்திக்கொண்டிருக்க, அதற்குள் பொலிசார் வந்துவிட்டிருக்கிறார்கள்.
பொலிசார் துப்பாக்கிகளுடன் அவரை சூழ்ந்துகொண்டு கத்தியைக் கீழே போடுமாறு பலமுறை எச்சரித்தும், அந்த நபர் அந்த எச்சரிக்கையை சட்டை செய்யாமல், அந்த 19 வயது இளம்பெண்ணை தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டிருந்திருக்கிறார்.
ஆகவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட, அவர் அங்கேயே உயிரிழந்திருக்கிறார். ஆனால், நடந்த பரிதாபமான விடயம் என்னவென்றால், பொலிசார் சுட்டதில், ஏற்கனவே கத்தியால் குத்தப்பட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண் மீதும் குண்டு பாய்ந்துள்ளது.
அந்த இளம்பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த பொலிசார், அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளார்கள்.
கத்தியால் குத்தியவர் யார், அவருக்கும் அந்த குடும்பத்தினருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
SIU investigating police-involved shooting in Ottawa; man fatally shot and woman sustained gunshot wound. Monica Hudon, spokesperson: pic.twitter.com/A7PjkxJRfz
— Special Investigations Unit (@SIUOntario) June 28, 2022