ஆப்கானிலிருந்து 3 பிள்ளைகளுடன் பிரான்சுக்கு தப்பிய தாய்: 12 வருடங்கள் கழித்து மகளை பார்த்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி, 12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக மகளை நேரில் பார்த்த தாய் கண்ணீருடன் ஆரத்தழுவிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்தி தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த 56 வயதான கதிரா (Qadira) என்கிற பெண், தனது மகள் மற்றும் 3 மகன்களுடன் மீட்பு விமானம் மூலம் காபூலில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி வந்துள்ளார்.
கதிராவின் மூத்த மகள் ஷகிபா தாவோத் (Shakiba Dawod), பிரான்சில் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார். பாரிஸ் விமான நிலையத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக தாயை நேரில் பார்த்த ஷகிபா, கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நீண்ட காலத்திற்குப் பின் தனது தாய், சகோதரர்கள், சகோதரியை கண்டு உணர்ச்சிப்பெருக்கில் காணப்பட்டார் ஷகிபா தாவோத்.
இதுகுறித்து ஷகிபா தாவோத் கூறுகையில், ''இன்று நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறேன். என் அம்மா என்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்த தருணத்தில், எனது பயங்கள் அனைத்தும் போய்விட்டன'' என்றார்.
மேலும், "நாங்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்றே எனக்கு தெரியவில்லை. இது ஒரு கனவு போல் இருக்கிறது" என்று கதிராவுடன் வந்த மகன் மஹ்தி (Mahdi) கூறினார்.