கனடாவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மகனைக் காண விசா மறுக்கப்பட்ட தாய்... தற்போது கிடைத்துள்ள நல்ல செய்தி
கனடாவுக்கு கல்வி கற்கவந்தபோது, உடல் நலம் பாதிக்கப்பட்ட சர்வதேச மாணவர் ஒருவரைக் காண்பதற்காக அவரது தாய் விசாவுக்கு விண்ணப்பிக்க, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
கென்யாவைச் சேர்ந்த Tevin Obiga (25) கனடாவில் மனித்தோபா பல்கலையில் கணினிப் பொறியியல் நான்காமாண்டு பயின்று வருகிறார். திடீரென அவரது நுரையீரலில் பூஞ்சைத் தொற்று உருவானது.
மருத்துவர்கள் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வின்னிபெக் மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடி வருகிறார் Tevin.
இந்நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் Tevinஐக் காண்பதற்காக அவரது தாயான Lilian Ndiego கென்யாவிலுள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தில் விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், கனடா செல்லும் பெரும்பாலான கனேடியர்கள் கென்யா திரும்புவதில்லை, அங்கேயே தங்கிவிடுகிறார்கள் என்று கூறி, அவரது விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில், Tevinஉடைய மருத்துவரான Dr. Owen Mooney, Ndiegoவை அவரது மகனைக் காண அனுமதிக்குமாறு கென்யாவிலுள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து மூன்று கடிதங்கள் எழுதிய அவர், தனது மூன்றாவது கடிதத்தில் Tevinஉடைய நிலை வேகமாக மோசமாகி வருவதாகவும், அவரைக் காண அவரது தாய்க்கு அனுமதியளிக்குமாறும் கோரியிருந்தார்.
வின்னிபெக் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினரான Terry Duguidம், Ndiegoவை அவரது மகனைக் காண அனுமதிக்குமாறு கென்யாவிலுள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
எப்படியாவது தன் மகனை சந்தித்து, மருத்துவமனையில் அவனுடன் நேரம் செலவிடவேண்டும் என விரும்பிய Ndiego, மீண்டும் ஒரு முறை தனது மகனைக் காண்பதற்காக விசா கோரி விண்ணப்பித்தார்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று Ndiegoவின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
Ndiegoவின் இரண்டாவது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த கூடுதல் தகவல்களைத் தொடர்ந்து, அவரது விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மகனைக் காண அனுமதி கிடைத்துள்ளதால் Ndiego மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன், நான் மிகவும் நன்றியுடையவளாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ள Ndiego, என் மகனைக் காண ஆவலாக இருக்கிறேன் என்கிறார்.
தனக்கு கிடைத்த மகிழ்ச்சியான தகவலைத் தொடர்ந்து கொரோனா பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டுள்ள Ndiego, கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா இல்லை என முடிவு வரும் நிலையில், இன்று, செவ்வாய்க்கிழமை மாலை கனடா புறப்பட இருக்கிறார்.