பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள்... லண்டன் தீவிபத்தில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாய் கண்ணீர்
லண்டன் தீவிபத்தில் பலியான இரண்டி ஜோடி இரட்டைக் குழந்தைகளின் தாய், பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இப்போது எல்லாமே முடிந்துபோய்விட்டது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன்று, தெற்கு லண்டனிலுள்ள, Sutton என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், இரவு 7.00 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
கொழுந்து விட்டெரிந்த அந்த தீயை அணைக்க, 8 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 60 தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது.
புகையினூடே வீட்டுக்குள் முகக்கவசம் அணிந்து நுழைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கிருந்து நான்கு குழந்தைகளை வெளியே தூக்கிக்கொண்டு வந்து முதலுதவி அளித்தும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர்கள் யாரையும் காப்பாற்றமுடியவில்லை.
Kyson மற்றும் Bryson (4) Leyton மற்றும் Logan (3) என்னும் அந்த இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் அந்த வீடு தீப்பிடிக்கும்போது, வீட்டில் தனியாக இருந்துள்ளது தெரியவந்தது.
பிள்ளைகளின் தந்தையான Dalton Hoath (28)ம், தாய் Deveca Rose (27)ம் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். தாய், பிள்ளைகளுடன் வாழ, தந்தை வேறிடத்தில் தனியாக வாழ்ந்துவந்திருக்கிறார். சம்பவம் நடந்தபோது, தாய் Deveca ஷாப்பிங் சென்றிருந்திருக்கிறார்.
இந்நிலையில், குழந்தைகளை தனியாக விட்டுச் சென்றதால் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியது. ஆனால், அந்தப் பெண் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தன் பிள்ளைகளின் துயர மரணம் குறித்து பேசியுள்ள Deveca, அவர்களது இழப்பை தன்னால் ஒரு நாளும் மறக்க இயலாது என்றும், தன் இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள் இல்லாமல் தான் வாழவேண்டியுள்ளதே என்றும் கதறியுள்ளார்.
என் பிள்ளைகள்தான் என் உயிர், என் வாழ்க்கை, என் உலகம் எல்லாமே என்கிறார் Deveca. அவர்கள் என் இதயம், என் ஆன்மா, எனக்கு எல்லாமே அவர்கள்தான். அவர்கள் இல்லாமல் எதுவுமே எனக்கு நிஜம்போல் தோன்றவில்லை. என்னால் இனி சாதாரணமாக வாழ முடியாது என்று கூறியுள்ளார் அவர்.
அவர்கள் மற்றவர்கள் எல்லாரையும் சந்தோஷப்படுத்திகொண்டிருந்தார்கள். அவர்களை இழந்ததால் நான் இனி எப்போதுமே வருத்தப்பட்டுக்கொண்டுதான் இருப்பேன் என்று கூறும் Deveca, பிள்ளைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக என்னென்னவோ திட்டம் வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களே இல்லை. அவர்கள் அலங்கரித்து வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தையும், அவர்களுக்காக வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகளையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்கிறார் அவர் கண்ணீருடன்!