தமக்கும் பிள்ளைகளுக்கும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய சுவிஸ் தாயார்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் தாயார் ஒருவர் வேண்டும் என்றே தமக்கும் சொந்த பிள்ளைகளுக்கும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் சுகாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமது செயலை குறித்த தாயார் நியாயப்படுத்தியுள்ளதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
பெர்ன் மாநிலத்தில் Oberaargau பகுதியை சேர்ந்த தாயாரே, தமக்கும் பிள்ளைகளுக்கும் வேண்டும் என்றே கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியவர்.
ஒவ்வாமை பாதிப்பு இருப்பதாக கூறி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து வந்த குறித்த தாயார், அவர் குடியிருக்கும் பகுதியில் கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதையே வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்.
முதலில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னர், தமது பிள்ளைகளுக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரே வீட்டில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு என்பதால், தனித்தனியாக தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் போனது.
ஆனால் தடுப்பூசிக்கு பயந்து கொரோனா பாதிப்பை ஏற்படுத்திக் கொண்ட செயல் கடும் விமர்சனத்தை வரவழைத்துள்ளது. இவ்வாறான நடவடிக்கை மருத்துவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொறுப்பற்ற செயல் என நிபுணர்கள் தரப்பு விமர்சித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஒவ்வொருவருக்கும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்க முடியாத சூழலில், உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்படும் என்பது அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.