8 வயது குழந்தையை தாயாரே கொன்றாரா? சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது 30 வயது பெண் மீது சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பொருட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் அதிகாரிகள் தரப்பு முடிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் இருந்தே இந்த வழக்கு தொடர்பில் அதிகாரிகள் தரப்பு விசாரித்து வருகிறது. மட்டுமின்றி, உயரதிகாரிகளிடம் இருந்து கடும் அழுத்தம் இருப்பதாகவும், தீவிர விசாரனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை குறித்த வழக்கில் அதிரடி திருப்பமாக, பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், வெள்ளிக்கிழமை குறித்த பெண்மணியை கைது செய்யும் பொருட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி படுகொலை தொடர்பில் குறித்த 30 வயது பெண்மணியை காவலில் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், கைதாகவிருக்கும் பெண் தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல் ஏதும் வெளியிட மறுத்துள்ளனர்.
இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் தாயாருக்கும் 30 வயது தான் எனவும், அவரது குடியிருப்பும் பொலிசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இதுவரை குற்றமற்றவர் என பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, சொந்த குழந்தையை தாயாரே கொலை செய்தாரா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.