பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது பொலிசார் வந்ததால் நிகழ்ந்த துயரம்: பிள்ளைகளைப் பிரிந்த தாயின் நிலை
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சிறுபடகொன்றில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது தன் பிள்ளைகளைப் பிரிந்தார் தாய் ஒருவர்.
பிரித்தானியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என்று நம்பி எடுத்த முடிவு
எரித்ரியா நாட்டவரான ஒரு பெண், தன் நாட்டிலும் பிறகு சூடான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளிலும் சித்திரவதை அனுபவித்ததால், பிரித்தானியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என்றும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும் என்றும் நம்பி, பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் ஒரு படகில் ஏற அந்தப் பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் முயன்றிருக்கிறார்கள்.
Photograph: Anadolu Agency/Getty Images
படகில் ஏறும்போது பொலிசார் வந்ததால் நிகழ்ந்த துயரம்
ஆனால், பிள்ளைகளை படகில் ஏற்றிவிட்டு, அந்தப் பெண் படகில் ஏற முயலும்போது பொலிசார் வரவே, கடத்தல்காரர்கள் படகை வேகவேகமாக தள்ளிவிட்டிருக்கிறார்கள்.
படகு வேகமாகச் செல்ல, படகில் ஏற முயன்ற அந்தப் பெண் தண்ணீரில் விழுந்திருக்கிறார்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் பிரான்சுக்குள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டு பிள்ளைகளும், பிள்ளைகள் தனியாக படகில் செல்வதைக் கண்டு தாயும் கதற, தாயும் பிள்ளைகளும் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரித்தானிய புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்று, தாயையும் பிள்ளைகளையும் சேர்த்துவைக்குமாறு பிரித்தானிய உள்துறை அலுவலகத்தை அணுகி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பிள்ளைகளைப் பிரிந்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலிருந்த அந்தப் பெண், 40 நாட்களுக்குப் பிறகு பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் தன் பிள்ளைகளை சந்திக்க இருக்கிறார்.
இதற்கிடையில், இன்னொரு பக்கம், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளை பிரித்தானிய அரசு மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.