ஆட்டிஸக் குறைபாடு கொண்ட மகனை கவனித்துக்கொள்ள இயலாமல் கொலை செய்த தாய்க்கு நேர்ந்துள்ள சோகம்
பிரித்தானியாவில், ஆட்டிஸம் முதலான குறைபாடுகள் கொண்ட மகனை தனி ஆளாக கவனித்துக்கொள்ள இயலாமல் கொலை செய்த தாய், நிரந்தரமாக மன நல மருத்துவமனையில் அடைக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
கடுமையான ஆட்டிசம் மற்றும் Cohen syndrome என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு, சரியான பார்வை இல்லாமல், பேச இயலாமல், நடக்கவும் இயலாமல் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் Dylan Freeman என்ற அந்த சிறுவனை ஊரடங்கு காலத்தில் யாருடைய உதவியுமின்றி, சமாளிக்க இயலாமல், அவனது தாயான Olga Freeman (40) கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதி வரை மகன் மீது அன்பைப் பொழிந்த அந்த தாய், சாகும்போது கூட தன் மகனுக்கு வலி தெரியக்கூடாது என்பதற்காக, அவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவனை தூங்கவைத்துவிட்டு, அவனது வாய்க்குள் ஒரு ஸ்பாஞ்சை வைத்து, அது வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக, தனது உள்ளாடையால் அதை இறுகக்கட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, Dylan, கொரோனா பொதுமுடக்கத்தால் மறைமுகமாக பாதிக்கப்பட்டவன் என்று கூறியுள்ளதுடன், அவனது தாயை நிரந்தரமாக மன நல மருத்துவமனையில் அடைக்க உத்தரவிட்டார்.
இது அசாதாரணமான மற்றும் மிகவும் சோகமான ஒரு வழக்கு என்று கூறியுள்ள நீதிபதி, மிக மோசமான ஒரு மன நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் Olga தன் மகனைக் கொன்றுவிட்டதாக தெரிவித்தார்.
ஆட்டிஸக் குறைபாடு கொண்ட Dylan சிறப்புப் பள்ளிக்கு செல்வதும் பிரதமரின் பொதுமுடக்கத்தால் தடைபட்டது.
ஆகவே, குழந்தையை கவனித்துக்கொள்ளும் மொத்த பொறுப்பும் Olgaவின் தோள்களில் விழுந்துள்ளது. ஏற்கனவே சில மன நல பிரச்சினைகள் உடைய Olgaவுக்கு, அதீத மன அழுத்தம் காரணமாக மன நல கோளாறுகளுக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.
அரசுக்கு உதவி கோரி அளித்த விண்ணப்பங்களுக்கும் சரியான நேரத்தில் பதில் கிடைக்காமல், கடைசியில் பெற்ற மகனை கொல்லும் நிலைமைக்கு Olga வந்துவிட்டார் என்று கூறியுள்ளார் நீதிபதி.
Olgaவுக்கு, இல்லாதவைகளை இருப்பது போல் தோன்றும் மன நல பிரச்சினை இருந்ததாக நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


