”மில்லர்” திரைப்படம் ஈழ சினிமாவின் புதிய திருப்புமுனைக்கான முயற்சி
மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை ஹொட்டல் வலம்புரியில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகியிருக்கிறது.
ஐபிசி தமிழ், பாஸ்கரன் கந்தையா Baskaran Kandiah தயாரிப்பில் ராஜ் சிவராஜ் Raj Sivaraj பூவன் மதீசன் Poovan Matheesan ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவர இருக்கும் மில்லர் திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.
படபூஜை, ஆசி உரைகளைத் தொடர்ந்து, நடராஜர் நர்த்தனாலய மாணவிகளது அற்புதமான நடன ஆற்றுகையோடு ஆரம்பமான நிகழ்வுகள் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததன. பாஸ்கரன் கந்தையாவின் வெற்றிகளுக்கு அதுவும் ஒரு காரணம் தான்.
இந்திய சினிமா பிரபலங்களை அழைத்தமை தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான விமர்சனங்கள் வந்தபோதும் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் உத்திக்கு அவை தவிர்க்கப்பட முடியாதது என்பது விமர்சகர்களுக்கும் புரிந்த ஒன்று தான்.
இந்திய கலைஞர்களை அழைத்து வருசத்துக்கு நாலு நிகழச்சி செய்யும் புலம்பெயர் தேசத்தில் இருந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான் வியப்பைத் தந்திருந்தன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்களது ”எங்களிடம் கதை இருக்கிறது, கதைக்குரிய களம் இருக்கிறது, அதை வெளிப்படுத்தும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள்” என்ற காத்திரமான உரையை அடியொற்றிய விருந்தினர்களது பேச்சுக்கள் ஈழ சினிமா மீதான நம்பிக்கையை உறுதி செய்திருந்தன.
மில்லர் திரைப்படத்தின் இயங்குனர் ராஜ் சிவராஜ், இந்திய பிரபலங்களைப் பார்த்து ”எங்கள் சினிமாவில் நடிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் உங்கள் கலைஞர்கள் இங்கு வரும் நிலையை வெகுசீக்கிரத்தில் உருவாக்குவோம்” என்று ஆற்றிய உரை ஈழ சினிமா மீதும் எம் கலைஞர்கள் மீதும் அவர் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையை பிரதிபலித்திருந்தது.
வழமை போலவே, அழைத்தவர்களைப் புகழ்ந்து பேசும் இந்திய கலைஞர்களது இயல்புக்கு இங்கும் குறையிருக்கவில்லை. கவிப்பேரரசு ரைவமுத்து மீது எத்தனை விமர்சனங்கள் மேலெழுந்த போதும் அவரது தமிழ்ப் புலமையும் அதனை கையாளும் லாவகமும் விமர்சனங்களை புறமொதுக்கி அவரது ஆழமான பேச்சில் லயிக்க வைத்தமையை ஹொட்டல் வலம்புரி மண்டபம் எடுத்தியம்பியது., மில்லர் படத்தின் கதாநாயகன் பாஸ்கரன் றீகனுக்கு இரண்டு அறிவுரைகள் என நல்ல பல உதாரணங்களுடன் கவிப்பேரரசு கூறியவை றீகனுக்கு மட்டுமல்ல றீகனைப் போன்ற தற்கால இளைஞர்களுக்கான மிக முக்கியமான அறிவுரையாக அமைந்திருந்தது. (அது பற்றி தனியான பதிவு எழுத வேண்டும்.)
இனி படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் பாஸ்கரன் றீகன், படத்தின் கதை றீகனுக்கு பொருந்தியிருக்கிறதா இல்லை றீகனுக்கு பொருத்தமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை மில்லர் வெளியீட்டின் பின்னர் தான் கூற முடியும். ஆனால் பாஸ்கரன் றீகன் கதாநாயகனுக்குரிய தோற்றத்தோடு மட்டுமல்லாது அதற்கு தன்னைத் தயார்ப்படுத்தி வைத்திருப்பதும் அவரது உரையின் மூலம் வெளிப்பட்டிருந்தது.
அதில் ஹைலட் ”இதுவரை பாஸ்கரனின் மகன் றீகன் என்று அழைக்கப்பட்ட நிலையை றீகனின் அப்பா பாஸ்கரன் என்று மாற்றும் வகையில் இந்தப் படத்தில் என் பங்கு இருக்கும்” என்று கூறியமை நம் இளையவர்களுக்கான முன்மாதிரியான உரையாகவும் அவர் மீதான நம்பிக்கையை தருவதாகவும் அமைந்திருந்தது.
மில்லர் படத்தின் நேற்றைய தொடக்கமும் அது கொடுத்திருக்கும் தாக்கமும் ராஜ் சிவராஜ், மதீசன் மற்றும் படக் குழுவினருக்கு பெரும் பொறுப்பைக் கையளித்திருக்கிது. ஈழசினிமாவை கொண்டாடுவதற்கு நம் இரசிகர்களும் தயாராக இருக்கிறார்கள், ஏற்கனவே பல வித்தியாசமான நல்ல படைப்புக்களை தந்து தன் இரசிகர்களை மகிழச்சிப்படுத்திய Black board international மீண்டும் தன்னை நிரூபிக்கும் என நம்புவோம் /நம்புகிறோம்.











| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |