மாயமான இளம்பெண்... கைது செய்யப்பட்ட உறவினர்கள்: வழக்கில் திடீர் திருப்பம்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர் மாயமானதைத் தொடர்ந்து பாதி எரிந்த நிலையில் உடல் ஒன்று கிடைக்கவே, பொலிசார் அந்தப் பெண்ணின் தந்தையையும் சகோதரரையும் கைது செய்தார்கள்.
அந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது!
மாயமான இளம்பெண்...
மத்தியப்பிரதேசத்திலுள்ள புர்ஹான்பூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவரான ஷிவானி என்னும் இளம்பெண், ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மாயமானார்.
அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்னும் இளைஞரும் மாயமானதால், இருவரும் இணைந்து எங்கோ சென்றுவிட்டதாக முடிவு செய்யப்பட்டது.
பாதி எரிந்த நிலையில் கிடைத்த உடல்
இதற்கிடையில், மே மாதம் முதல் வாரத்தில், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ஜாமோத் என்னுமிடத்தில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மஹாராஷ்ட்ரா மாநில பொலிசார் மத்தியப் பிரதேச மாநில பொலிசாருக்கு தகவல் கொடுக்க, அது ஷிவானியாக இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள் பொலிசார்.
அதைத் தொடர்ந்து, ஷிவானியை கொலை செய்ததாக அவரது தந்தையும் சகோதரரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அதிரடி திருப்பம்
இந்நிலையில், நேற்று முன்தினம், புர்ஹான்பூரிலுள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு வந்த இளம்பெண்ணொருவர், தான்தான் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷிவானி என்று கூறியுள்ளார்.
தான், விருப்பத்தின் பேரிலேயே அர்ஜூனுடன் சென்றதாகவும், தான் நன்றாக இருப்பதாகவும் கூறிய ஷிவானி, தன் தந்தையையும் சகோதரரையும் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, கைரேகை மற்றும் ஆவணங்கள் மூலம் அந்தப் பெண் ஷிவானிதான் என்பது உறுதி செய்யப்படவே, ஷிவானியை கொலை செய்ததாக சிறையிலடைக்கப்பட்டுள்ள அவரது தந்தையையும் சகோதரரையும் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் துவக்கப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், பாதி எரிந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கிடைத்த அந்த உடல் யாருடையது என்பதற்கு இப்போது அதிகாரிகள் பதில் சொல்லியாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |