பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்ட mpox தொற்று: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ஆப்பிரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவரும் mpox தொற்று, தற்போது முதன்முறையாக பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் அவசர சிகிச்சைப் பிரிவில்
mpox தொற்று பரவிவரும் நாடுகளில் ஒன்றில் பயணப்பட்டதாக கூறப்படும் பிரித்தானியர் ஒருவருக்கு தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து லண்டனின் ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் உள்ள உயர் பாதுகாப்பு தொற்று நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ம் திகதி ஒரே இரவில் விமானத்தில் பிரித்தானியா திரும்பிய பிறகு அந்த நபர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அக்டோபர் 27 அன்று லண்டனில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நபரைத் தொடர்பு கொண்டவர்களை சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பிரித்தானியாவில் mpox தொற்றின் இந்த வகையை உறுதி செய்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் பொது மக்களுக்கான ஆபத்து குறைவு என்றும், பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிந்து, சாத்தியமான பரவலின் அபாயத்தைக் குறைக்க விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
2022ல் உலகம் முழுக்க mpox தொற்று பரவ காரணமான clade II வகையை விடவும் தற்போது லண்டனில் உறுதி செய்யப்பட்டுள்ள clade Ib மிக ஆபத்தான வகை என்றே கூறப்படுகிறது.
150,000 டோஸ் mpox தடுப்பூசி
2022 முதல் clade II வகை mpox தொற்று பிரித்தானியாவில் மிக அரிதாக காணப்பட்டு வந்துள்ளது. பொதுவாக சம பாலின ஈர்ப்பு நபர்கள், இருபால் ஈர்ப்பு நபர்கள் உள்ளிட்டவர்களிடம் clade II வகை mpox தொற்று கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்பிரிக்காவில் mpox தொற்று மிக ஆபத்தான வகையில் பரவியதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவித்த நிலையில்,
கடந்த மாதம், பிரித்தானிய அரசாங்கம் அதன் தயார்நிலையை அதிகரிக்க 150,000 க்கும் மேற்பட்ட டோஸ் mpox தடுப்பூசிகளை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் காங்கோ குடியரசில் பரவிய இந்த தொற்றானது மிக விரைவில் அண்டை நாடுகளுக்கும் பரவியது. mpox தொற்றானது காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்களை ஏற்படுத்தும். சிலருக்கு mpox பாதிப்பானது மிக ஆபத்தாக மாறும் வாய்ப்புகளும் அதிகம் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |